திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி பிரிந்தாலும், “நிதி ரீதியாகச் சுயசார்புடையவர்” என்றால் அவருக்கு நிரந்தர ஜீவனாம்சம் (maintenance) வழங்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய ரயில்வேயின் போக்குவரத்து பிரிவில் குரூப் ‘ஏ’ அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவர் ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக ஒரு குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனில் க்ஷேத்ரபால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், மனைவி இந்திய ரயில்வேயின் போக்குவரத்து பிரிவில் குரூப் ‘ஏ’ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கணிசமான வருமானம் பெறும் நிலையில் இருப்பதால், அவரை “நிதிச் சுதந்திரம் பெற்றவர்” என நீதிமன்றம் வரையறுத்தது. அத்துடன், அவர் தனது கணவரை நோக்கி தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தியதும், அவரது தாயை இழிவாகப் பேசியதும், அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனை “மனரீதியான கொடுமை” எனக் குறிப்பிடும் வகையில் நீதிமன்றம், கணவருக்கு விவாகரத்து வழங்கியிருந்தது. மனைவி தரப்பில், “திருமணத்தை ரத்து செய்ய சம்மதிக்க ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதனை நீதிமன்றம் கடுமையாகப் பதிவு செய்து, “இது பாசத்தையோ உறவையோ காப்பாற்றும் நோக்கமல்ல; பொருளாதார ரீதியாகப் பலன் பெறும் நோக்கத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது” எனக் கூறியது. இறுதியாக, “குறுகிய கால திருமண வாழ்க்கை, குழந்தைகள் இல்லாதது, மனுதாரரின் உயர்ந்த வருமான நிலை, நிதி தேவையை நிரூபிக்கும் ஆதாரம் இல்லாதது ஆகிய காரணங்களால் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை.” எனக் கூறி, குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.