நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த உமா அவர்கள் தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பிரிய மனமின்றி திருநங்கைகள் கண்ணீர் விட்ட நிலையில் அவர்களின் அன்பால் ஆட்சியர் உமாவும் கண் கலங்கிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தின், திட்ட இயக்குநராக என உமா பணியாற்றி உள்ளார். மருத்துவத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை உமா வகித்துள்ளார். நேர்த்தியாக மிக சுறுசுறுப்பாக பணிகளை செய்யும் உமாவை தேடி பல்வேறு உயரிய பதவிகள் வந்தன. அந்த வகையில் கடந்த 2019 -ஆம் ஆண்டு மாநில தேர்வின் மூலம் சிறப்பு பிரிவின் கீழ் IAS அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். தமிழகத்தில் அரசு மருத்துவர் ஒருவர் சிறப்பு பிரிவின் கீழ் IAS அதிகாரியாக பதவி உயர்வு பெற்றது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா தொற்று காலகட்டத்தில் மாநில அளவில் சென்னை வார் ரூம் கண்காணிப்பாளராக உமா திறம்பட செயல்பட்டார். தமிழக அரசு கொரோனா பரவலைத் திறம்பட கட்டுப்படுத்துவதில் உமா IAS முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், தேசிய நலவாரிய குழும இணை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளையும் வகித்துள்ளார் உமா. மேலும் திருவள்ளூர் பயிற்சி ஆட்சியர், பழனி சார் ஆட்சியர், ராணிப்பேட்டை துணை ஆட்சியர் என பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகப் பணிகளையும் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில்,கடந்த 2023-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தின் 16 வது மாவட்ட ஆட்சியராக உமா பதவி ஏற்றார். உமா நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர், சுற்றிச் சுற்றி ஆய்வு பணிகளை மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வந்தார். மேலும் திருநங்கைகளின் நல்வாழ்வுக்காகவும் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.
இந்நிலையில், உமா தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் கூடுதல் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக துர்கா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உமா பிரியாவிடை பெற்றுச் செல்லும் நிலையில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், திருநங்கைகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் நீங்களே மீண்டும் இங்கு ஆட்சியராக வரவேண்டும் எனவும், எங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளீர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ஆட்சியர் உமா உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திருநங்கைகள், குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நீங்கள் தாய் போல எங்களை பார்த்து கொண்டீர்கள் என்று கண்ணீர் விட்டு அழுதனர். உடனே நீங்க அழாதீங்க என்று கூறியபடியே ஆட்சியர் உமாவும் கண் கலங்கினார். திருநங்கைகள் சிலர் கையெடுத்துக் கும்பிட்டு, அவரது நெற்றியில் விபூதி இட்டு எங்கு சென்றாலும் நன்றாகப் பணியாற்றுவீர்கள் என வாழ்த்தினர். அவர்களுக்கு உமா நெகிழ்ந்து போய் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். இந்த உருக்கமான காட்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.