எனக்கும் அண்ணாமலைக்கும் சிண்டு மூட்டி விடும் கேள்விகளை கேட்க வேண்டாம்.. டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை இடையிலான சந்திப்பு நட்பு ரீதியிலானது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து இறக்கி நயினார் நாகேந்திரன் அவர்களை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டு அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி மலர்ந்தது. அன்றில் இருந்து நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இடையில் மோதல் வெடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதோடு, அதற்கு நயினார் நாகேந்திரனை நேரடியாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜேபி நட்டாவை சந்தித்து திரும்பினார். நயினார் நாகேந்திரன் டெல்லி சென்ற நேரத்தில் அண்ணாமலை நேரடியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதுமட்டுமல்லாமல் விரைவில் ஓபிஎஸ்ஸை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் நயினார் நாகேந்திரனை ஓரம்கட்ட அண்ணாமலை முயற்சிப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, எனக்கும் அண்ணாமலைக்கும் சண்டை மூட்டி விடுவதை போல் கேள்விகளை கேட்க வேண்டாம்.. டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை இடையிலான சந்திப்பு நட்பு ரீதியிலானது. எனக்கும் மற்ற கட்சிகளில் நட்பு இருக்கிறது. அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.