நிதி வேண்டாம்; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி காவல்துறை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை உள்ள கேடிசிஆர் பகுதியில் வசித்து வரும் பட்டாலியன் காவல்துறையில் சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் – கிருஷ்ணகுமாரி தம்பதி இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகனும், சுபாஷினி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். முன்னதாக சரவணக்குமார்- கிருஷ்ணகுமாரி தம்பதி திருநெல்வேலியில் இருந்த போது, சுபாஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.

அப்போதே ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் என்பவருடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். கவின் செல்வகணேஷ் சென்னையில் வேலை பார்த்து வந்தபோதிலும், விடுமுறைக்குச் செல்லும்போது சுபாஷினியை சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுபாஷினி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த கவின் செல்வகணேஷ், சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கவினை சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கவின் செல்வகணேஷின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சுர்ஜித்தின் பெற்றோரின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவினின் உறவினர்கள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முக்காணி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, மூன்று மணி நேரமாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.கவினின் உடல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் செல்வகணேஷின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பையும், சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாரிகள் வன்கொடுமை பாதிப்பு முதற்கட்ட நிதியை கொண்டு சென்று கவின் செல்வகணேஷின் தந்தை சந்திரசேகரிடம் கொடுக்க சென்றபோது தனக்கு நிதி தேவையில்லை; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி நிதியை வாங்காமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கவின் செல்வகணேஷ் செல்போன் பாஸ்வேர்டை பெறவும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் நடவடிக்கையிலும் காவல்துறை இறங்கியது. இதற்காக கவின் செல்வகணேஷின் சகோதரன் பிரவீன் மற்றும் உறவினர்களை பேச்சுவார்த்தைக்கு திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர் மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் முன்னிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கவின் செல்வகணேஷ் மற்றும் அவர் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடலை வாங்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் ஆணையாளர் சந்தோஷ், துணை ஆணையர் பிரசன்ன குமார் ஆகியோர் வலியுறுத்தினர் ஆனால் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நபர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.