குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 74 வயதான ஜெக்தீப் தன்கர், கடந்த 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜகதீப் தன்கர் எழுதிய கடிதத்தில், “மருத்துவ ரீதியான காரணங்களுக்காக குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பணியில் நான் பெற்ற அனுபவங்கள் மகத்தானது. இந்த பணி காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு, அதில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுகிறேன். தேசத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சகாப்தத்தில் பணி செய்ததை கவுரவமாக கருதுகிறேன்.
இந்நேரத்தில் தேசத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அதன் எதிர்காலத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்” என ஜகதீப் தன்கர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.