மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன் அரசு வாகனம் இல்லாமல் நடந்தே அலுவலகம் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் உயர் அதிகாரிகள் “டார்ச்சர்” கொடுக்கிறார்கள் என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன் பேசிய ஆடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன் பதிலளித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால் சில அதிகாரிகள் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய பின், மயிலாடுதுறைக்கு 2024, நவம்பர் மாதம் வந்தேன். நான் சம்பளத்தில் மட்டுமே வேலை செய்கிறேன். ஆனால் மார்ச் மாதம் வரை எனக்கு சம்பளம் போடவில்லை.
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளேன். இவையனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக விஆர்எஸ் கொடுத்துவிட்டேன். அப்படிக் கொடுத்தால், 3 துறைகள் சார்பாக விசாரிப்பார்கள். நற்சான்றிதழ் இருந்தால் உடனடியாக விஆர்எஸ் கொடுத்து விடுவார்கள். 3 துறைகளிலும் விசாரித்து எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லையென்று தெரிந்த பின், ஏப்ரல் மாதத்துடன் வேலையில் இருந்து போகவிருந்தேன். ஆனால் மார்ச் மாதம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அழைத்து அறிவுரைகளை அளித்தார். அதன்பின் டார்ச்சர் செய்து கொண்டு இருக்கிறார்கள். நான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்கிறார்கள்.
என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது யார் தெரியுமா? இந்த காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்.. காவல் ஆய்வாளர் என்று சொல்லுவதற்கு லாயக்கில்லை.. காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சட்டம் – ஒழுங்கு, காவல்துறைத் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய மூவரும் நின்று பேச வேண்டும். இந்த விவகாரம் எவ்வளவு பெரிய பிரச்சனை என்று நன்றாகத் தெரியும். காவல்துறை விதிகளில் இது மிகப்பெரிய தவறு.. தெரியாமல் பேசவில்லை.. இந்த அதிகாரிகளுக்கு எதிராக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை இப்படிப் பேசுவதற்குத் தூண்டிவிட்டார்கள்.
இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கும் வரை, என்னை மாதிரியான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். அஜித் குமார் வழக்கில் மேல் அதிகாரிகளின் தவறான உத்தரவால், அனைத்து காவல்துறை குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. இதே காவல்துறை கண்காணிப்பாளரும் அதனைத்தான் செய்து வருகிறார். சிறப்பு டீம் ஒன்றை வைத்து கொண்டு பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறார். சிறப்பு டீம் யாரென்று மேல் அதிகாரிகள் விசாரித்தால் தெரியும். எந்த விசாரணையாக இருந்தாலும், நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என சுந்தரேசன் தெரிவித்தார்.