300 பவுன் போட்டும் பத்தல… வரதட்சணை கொடுமை தாங்க முடியல திருமணமாகி 78 நாட்களில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவனம் நடத்தி வரும் அண்ணாதுரை. இவர் ஈரோடு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார். இவரது மகள் ரிதன்யா என்பவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன் கவின் குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணத்தின் போது வரதட்சணையாக 300 பவுன் நகைக்கும் மேல் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 300 பவுன் போதாது எனவும் 500 பவுன் மேல் வாங்கி வா என கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவை கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கொடுமை குறித்து பல முறை தனது பிறந்த வீட்டில் தெரிவித்த நிலையில் பெண் வீட்டார், கவின்குமாரை அழைத்து சமாதானம் பேசினர். இதையடுத்து இனிமேல் பிரச்சினை செய்ய மாட்டோம் என சொல்லி ரிதன்யாவை அழைத்து சென்றாராம். மகளுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என பெண் வீட்டார் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், கவின்குமார் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
என்ன செய்வது என தெரியாமல் மனஉளைச்சலில் இருந்த ரிதன்யா, சம்பவத்தன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்து அங்கு கவின்குமார் போன் செய்துள்ளார். ஆனால் அங்கும் ரிதன்யா வரவில்லை என சொல்லப்பட்டதால் கவின்குமார், ரிதன்யாவை தேடினார். அது போல் ரிதன்யாவின் குடும்பத்தினரும் தேடினர். அப்போது மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் இறந்த நிலையில் கிடந்தார்.
அவரது கையில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகள் இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த சேவூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை வரதட்சணை கொடுமையால் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது காரை எடுத்துக் கொண்டு சென்ற ரிதன்யா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் ஆடியோ மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோவில் மாப்பிள்ளை வீட்டார் என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்கள். 3 பேரும் சேர்ந்து என்னை கடுமையாக சித்ரவதை செய்கிறார்கள். எனவே இந்த கொடுமையான வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. அதே வேளையில் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை, ஒருவனுக்கு ஒருத்திதான் என கண்ணீர் விட்டபடி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரிதன்யாவின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பிறகு கணவர் கவின்குமார், மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். 300 பவுன் நகையையும் கொடுத்து தற்போது மகளையும் இழந்துவிட்டோமே என ரிதன்யாவின் பெற்றோர் கண்ணீர் விட்டு அழுத்த காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.