நாமக்கல் சிறுநீரக விற்பனை விவகாரத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அபிராமி கிட்னி கேருக்கு தடை மற்றும் திமுக தலைமை பேச்சாளரான மா. ஆனந்தனை 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ், அன்னை சத்தியா நகர், குமாரபாளையம், வெப்படை சுற்று பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து அவர்களது வறுமையை பயன்படுத்தி கொள்ளும் சிறுநீரக விற்பனை கும்பல், அறுவை சிகிச்சை மூலம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தை விற்பனை செய்து 10 லட்சம் ரூபாய் வரை பெற்று தருவதாக கூறி தொழிலாளர்களை மூளை சலவை செய்துள்ளனர். பின்னர் ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, கொச்சின், பெங்களூரு போன்ற இடங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிறுநீரகத்தை விற்பனை செய்கின்றனர்.

மேலும் சிறுநீரகம் கொடுத்ததாகக் கூறப்படுபவர்கள், புரோக்கர்களாகச் செயல்பட்டு தங்களது உறவினர்களுக்கும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சென்னை சுகாதாரத்துறை சட்டபிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுநீரகத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படும் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், “குடும்பத் தேவைக்காக மகளிர் குழுக்களில் கடன் வாங்கினோம். வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் போதாததால் குழு கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி குழு கடனைச் செலுத்தினோம்.
கடன் சுமை அதிகமாகி விட்டதால் வேறு வழி இல்லாமல் கிட்னி விற்றேன். இதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். அதைப் பெற்று வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தி உள்ளேன். எனது கணவரும் சிறுநீரகத்தை கொடுத்துள்ளார்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் யாரெல்லாம் சிறுநீரகத்தை விற்பனை செய்தது, புரோக்கராகச் செயல்பட்ட திமுக தலைமை பேச்சாளரான மா. ஆனந்தன் எங்குத் தலைமறைவாக உள்ளார் என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மா. ஆனந்தன் மீது பள்ளிபாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திய நிலையில், இதில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அபிராமி கிட்னி கேர் என்ற மருத்துவமனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.