“எனக்கு தெரியும் சஞ்சய் மாமா தான் அப்பாவை இப்படி பண்ணாங்க நான் பாத்த” என மூன்று வயது குழந்தை அழுதுகொண்டே வாக்குமூலம். 3 வயது மகளின் கண்முன்னே தாய் தனது கள்ளுக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கேட்ரிங்க் முடித்துவிட்டு ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அடுத்துள்ள குப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த பாரத். இவருக்கும் பெங்களூர் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு மூன்று மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில். பாரத் தனது குடும்பத்துடன் தாம்பரத்தில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
வாரத்தின் இறுதி நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார். அது போல சொந்த ஊருக்கு செல்லும் போது, பாரத்தின் மனைவி நந்தினிக்கு எதிர் வீட்டில் வசிக்கும் வரும் சஞ்சய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்தது பாரத்திற்கு தெரிய வர பாரத் தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார்.

மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பும் கூட சஞ்சயை வைத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியபோது பாரத் நந்தினியை தரக்குறைவாக பேசி திட்டியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து நந்தினி தனது காதலனான சஞ்சய் இடம் அழுது புலம்பியுள்ளார். இதனை தொடர்ந்து பாரத்தை கொலை செய்து விட்டு நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என இருவரும் முடிவெடுயுள்ளனர். வழக்கம் போல் நந்தினி தனது கணவருடன் கடந்த சனி ஞாயிறு தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
பின்னர் எப்போது ஞாயிற்றுக்கிழமை இரவே சென்னைக்கு கிளம்பும் பாரத்தை நந்தினி “நாளை ஒரு நாள் இங்கு இருக்கலாம்” என வற்புறுத்தி ஊரில் தங்க வைத்துள்ளார். திங்கட்கிழமை மாலை கணவனிடம் நந்தினி தன்னை கடைக்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார். நந்தினி மற்றும் தனது மூன்று வயது மகளை பாரத் குருவராஜபாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் அங்குள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.
அப்போது சின்ன பள்ளிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள பாலத்தில் தென்னை மட்டைகளை போட்டு வைத்து விட்டு பாரத் வருவதற்காக காத்திருந்த சஞ்சய். அந்த மட்டைகளால் வாகனம் தடுமாறி பாரத் கீழே விழுந்தவுடன் பாரத்தை கத்தியால் சரமாரியாக கழுத்து, கை, கால்கள் ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பாரத் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் நந்தினியிடம் விசாரணை நடத்தியபோது அவர் தனக்கு வண்டியில் இருந்து கீழே விழுந்தது மட்டும் தான் நினைவில் இருக்கு என் கூறி முன்னுக்கு பின்னாக தெரிவித்தார். அப்போது பாரத்தின் மூன்று வயது பெண் குழந்தையிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது குழந்தை அழுதுகொண்டே “எனக்கு தெரியும் சஞ்சய் மாமா தான் அப்பாவை இப்படி பண்ணாங்க நான் பாத்த” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த சஞ்சயை அவரது மொபைல் சிக்னல் வைத்து மூன்று மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு சஞ்சய் மற்றும் நந்தினியை கைது செய்துள்ளனர். 3 வயது மகளின் கண்முன்னே தாய் தனது கள்ளுக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.