கடலூரில் பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவதாக வந்த தகவலின்பேரில் போலி மருத்துவர் தம்பதி மற்றும் 6 பேரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிவதும், கண்டறிந்த பின்னர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். சிலர் பணத்திற்காக சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையங்களை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட மையங்களுக்கு அடிக்கடி மருத்துவக் குழுவினர் சென்று ஆய்வு நடத்தி, அவர்களை கைது செய்வது வாடிக்கையாகும். அந்த வகையில் கடலூர் உள்ள கருக்கலைப்பு மையத்தில் கூண்டோடு சிக்கியுள்ளனர்.
கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அதே பகுதியை சேர்ந்த சிவகுருநாதன் BSc., வேளாண்மை படித்து விட்டு, டெல்லியில் சித்த மருத்துவம் படித்ததாக சான்றிதழ் பெற்றும் இவரது மனைவி உமாமகேஸ்வரி நர்சிங் படித்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் எஸ்.ஐ.டி. ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வந்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் அதே இடத்தில் மருத்துவமனை நடத்தி நோயாளிகளுக்கு போலி மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். இந்த எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவதாக மாவட்ட மருத்துவக்குழுவினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
அதன்பேரில் கடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக்குழு மற்றும் காவல்துறையினருடன் அந்த பயிற்சி மையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த குறிப்பிட்ட எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் சிவகுருநாதன் மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகிய இருவரும் சட்ட விரோதமாக பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் தொடர்ந்து அவர்களை பிடித்து காவல்துறை விசாரணை செய்தபோது அவர்களுக்கு ஏஜெண்டுகளாக சிலர் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வைடிப்பாக்கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான மூர்த்தி, விருத்தாசலத்தில் இதேபோல் நர்சிங் பயிற்சி மையம் நடத்தி வரும் ஸ்ரீமுஷ்ணம் கார்மாங்குடியை சேர்ந்த வீரமணி, கடலூர் அடுத்த காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை நர்சான நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த அபியாள், அங்கு மருந்தாளுனராக வேலை பார்த்து வரும் பெரிய காரைக்காட்டை சேர்ந்த தங்கம் ஆகியோரும் கருக்கலைப்புக்கு ஏஜெண்டுகளாக செயல்பட்டது விசரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து கருக்கலைப்புக்கு தேவைப்படும் மருந்து, மாத்திரைகள், ஊசி, கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தார்கள். இங்கு கள்ளக்காதலில் கருவுறும் பெண்கள் தான் அதிக அளவில் வந்து, கருக்கலைப்பு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தவிர பள்ளி, கல்லூரி மாணவிகளும் வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.