திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதவிதமாக பல்வேறு வண்ணங்களில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் அடையாள அட்டையை வைத்திருந்த நபரால் காவல்துறையினரே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த கூந்தன்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன். இவர் காவல்துறையினர் அணியும் சூ மற்றும் பெல்ட் அணிந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கு நேர்காணலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவருடைய கழுத்தில் சிபிஐ இயக்குனர் என அடையாள அட்டையும் அணிந்து வந்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், அவரை சோதனை செய்தபோது அடையாள அட்டையில் சிபிஐ இயக்குனர் என இருந்ததால் சந்தேகமடைந்தனர். அதைத் தொடர்ந்து அவரது கைப்பையையும் சோதனைக்கு உட்படுத்தினர். அதில் சிபிஐ இயக்குனர் உள்பட மத்திய புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிவதற்கான அடையாள அட்டைகளை வைத்திருந்ததைக் கண்டுப்பிடித்தனர்.

மேலும் பல்வேறு பத்திரிகை நிறுவன அடையாள அட்டைகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அடையாள அட்டையும் அவரிடம் இருந்தது. இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே அவரை தனியாக அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் அதற்கான சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும் காண்பித்துள்ளார்.
எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. எதற்காக இதுபோன்று போலி அடையாள அட்டைகள் வைத்திருக்கிறீர்கள் என காவல்துறையினர் எழுப்பிய கேள்விக்கு நல்ல பணிக்கு செல்ல வேண்டும் என்பதால் இதுபோன்ற அடையாள அட்டைகளை தயாரித்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். வேல்முருகன் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அதனால் இதுபோன்ற அடையாள அட்டைகளை தயாரித்து வைத்திருந்தாரா? அல்லது எதுவும் மோசடியில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.