வடமாநிலத்தவர்கள் கூட்டமாகக் குவிந்து, காவல்துறையினரை தாக்கும் அளவிற்கு சென்றுள்ளதை பார்க்கிறோம். தமிழ்நாட்டின் காவல்துறையை நேரடியாகத் தாக்குவது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு விடப்பட்ட நேரடியானச் சவாலாகும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் L&T கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர்பிரசாத் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அமர்பிரசாத் நேற்றிரவு காட்டுப்பள்ளியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில், வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவலறிந்த காட்டூர் காவல்துறை, சம்பவ இடத்திற்கு விரைந்து, அமர்பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த அமர்பிரசாத்தின் உடலை தங்களிடம் காண்பிக்க வேண்டும், அவரின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும், அமர்பிரசாத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2000 -ற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், காட்டுப்பள்ளி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனிடையே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் அப்பகுதியே சிறிது நேரம் போர்க்களம் போல காணப்பட்டது.
இது தொடர்பாக வேல்முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், காட்டுப்பள்ளியில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட, வட மாநிலத்தவர்களின் கொடும் தாக்குதலைக் கண்டிக்கின்றோம்! தமிழ்நாட்டின் இளைஞர்கள் கல்வி கற்று, பட்டம் பெற்றும் வேலை இன்றித் தவிக்கும் வேதனையை, நாம் தினமும் கண்டு வருகிறோம். ஆனால், குறைந்த கூலி என்ற பெயரில் வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் சூழ்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழர்களின் வாய்ப்புகளைப் பறித்து, தமிழரின் வாழ்வுரிமையை மிதிக்கின்ற இந்தச் சதியை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் தமிழர் விரோதப் கொள்கையும், திட்டமிட்டு வடமாநிலத்தவர்களை குடியேற்றும் அரசியலும், நாளுக்கு நாள் தமிழரின் வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை, வாக்குரிமை, அரசியல் அதிகாரம் அனைத்தையும், சுரண்டுவதற்காகவே செய்யப்படுகின்றன. அதற்குச் சான்றாகவே, திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில், நேற்று வடமாநிலத்தவர்கள் கூட்டமாகக் குவிந்து, காவல்துறையினரை தாக்கும் அளவிற்கு சென்றுள்ளதை பார்க்கிறோம்.
தமிழ்நாட்டின் காவல்துறையை நேரடியாகத் தாக்குவது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு விடப்பட்ட நேரடியானச் சவாலாகும். இந்தக் கொடூரச் செயலைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கடுமையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டின் காவல்துறையைத் தாக்கியுள்ள, இந்த வன்முறை இன்னும் தொடருமானால், நாளை தமிழ்நாட்டு மக்களின் உயிரும், உரிமையும் அபாயத்தில் சிக்கிக்கொள்ளும் என்பதை, இந்தச் சம்பவம் வெளிப்படையாக எடுத்துக் காட்டுகிறது. தமிழக அரசு, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடுமையானச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்டம் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும். நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள உள்நுழைவுச் சட்டம், தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் இங்கே பணி செய்து வரும் வட மாநிலத்தவர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகுக் குடியேறிய வடமாநிலத்தவர்களுக்கு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்க கூடாது என்பதையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கையுடன் வலியுறுத்துகிறது.
தமிழரின் வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை, வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிகளையும், திட்டமிட்ட வடமாநிலத்தவர்களின் குடியேற்ற அரசியலையும், தமிழ்நாட்டு மக்கள் இனி ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் உரிமை, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றை காக்க, எங்களின் போராட்டம் மேலும் தீவிரமாகவும் தளர்ச்சியின்றியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வேல்முருகன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.