நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் வருவாய்துறை உற்பட எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.
அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையத்தை சேர்ந்த கண்ணையன். தனது நிலத்தை அளப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபு, உதவியாளர் வேல்முருகன். ஆகியோர் நிலத்தை அளப்பதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணையன் சேலம் லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் அளித்தார். இதன் பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புதுறை கண்ணையனிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். இதனை கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் உதவியாளர் வேல்முருகன் ஆகியோரிடம் கண்ணையன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தது இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு சிறுது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.