அரசு எதிர்கால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி – கடலையூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஸ்வநாத தாஸ் நகர். இந்த நகரில் எதிர்கால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருந்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மீண்டும் கட்டிடப் பணிகள் தொடங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி – கடலையூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டிடப் பணிகளை நிறுத்த வேண்டும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பணிகள் நிறுத்தப்படும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக கோவில்பட்டியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.