ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை, அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தூங்கிக் கொண்டிருந்த தந்தை கழுத்தில் கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்த அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்த கணேசன். அவருக்கு மோகன்ராஜ், ஹரிஹரன் என்ற 2 மகன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் ஓட்டுநராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூ.3 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.

இதையடுத்து அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா, துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, ஆய்வாளர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் உதவி ஆய்வாளர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இவ் வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்தனர். விசாரணையில், பாம்பு கடித்து அப்பா இறந்துவிட்டதாகக் கூறினர். தொடர்ந்து கணேசனை எப்போது பாம்பு கடித்தது என இருவரிடமும் காவல்துறை விசாரித்தபோது எந்த நேரத்தில் கடித்தது என எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பார்க்கும் போது அவர் வாயில் நுரைதள்ளி மயங்கிய நிலையிலிருந்தார் என்று மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் தெரிவித்தனர். பாம்பு எப்படி வீட்டுக்குள் நுழைந்தது என கேட்டது என்று கேட்டதற்கு தெரியாது என பதிலளித்து இருக்கிறார்கள். இதையடுத்து கணேசனைக் கடித்த பாம்பை கொன்று விட்டீர்களா? என காவல்துறை கேட்டனர்.
ஆமாம், அப்பாவை கடித்த பாம்பு, அதே அறையில் பதுங்கியிருந்தது. அது வேறு யாரையும் கடித்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இருவரும் அடித்தே கொன்று விட்டோம் என கூறினர். மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கூறிய பதிலை உண்மையென நம்புவதைப் போல இருவரையும் விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் இருவரையும் ரகசியமாக தனிப்படை கண்காணித்தனர். கணேசன் உயிரிழந்த தினத்தில் மோகன்ராஜ், ஹரிகரனின் நடவடிக்கை குறித்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்து சில தகவல்களை தனிப்படை சேகரித்தனர்.
இந்த புலனாய்வில் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதத்தில் பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார், தினகரன் ஆகியோரிடம் அடிக்கடி பேசி வந்ததும் அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதில் தினகரன், என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த தகவலை தெரிந்த தனிப்படை, அவரிடம் விசாரித்தனர். தனிப்படையின் கிடுக்குப்பிடி விசாரணையில் கணேசனைக் கொலை செய்ய தினகரன்தான் கட்டுவிரியன் பாம்பை பிடித்து கொடுத்த தகவல் தெரியவந்தது. இதற்காக அவருக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் அளித்த தகவலின்படி கூலிப்படையாக செயல்பட்ட பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இன்ஸ்சூரன்ஸ் பணம், அரசு வேலை ஆசையில் பெற்ற அப்பாவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்துக்காக மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த விசாரணையில், “கணேசனைக் கொலை செய்யும் சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் நாகபாம்பை வைத்து கடிக்க வைத்து இருக்கிறார்கள். ஆனால் பாம்பு கடித்தும் நல்ல வேளையாக கணேசன் உயிர் பிழைத்து விட்டார். அதனால் இரண்டாவது தடவை கொடிய விஷம் கொண்ட பாம்பான கட்டுவிரியனை கொண்டு வந்து கடிக்க வைத்து கணேசனை தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை காட்டில் பிடித்து கொண்டு வந்து கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்து கொலை செய்ய ரூ.1.50 லட்சம் கூலியை மோகன்ராஜ் கொடுத்துள்ளார். இதற்காக மோகன்ராஜ் அலைபேசியில் இருந்து கூகுள் பே மூலம் நவீன்குமார் என்பவருக்கு ரூ.90 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் கையில் அறுபதாயிரம் கொடுத்துள்ளார். இப்பணத்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் மற்றும் அவருடன் செயல்பட்ட 3 பேரும் பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது.