மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேச வேண்டும், மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானேவின் பயந்தர் பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் இந்தியில் பேச மறுத்து வாக்குவாதம் செய்ததால், அவரை மகாராட்டிரா நவநிர்மாண் சேனாவை சேர்ந்த நபர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் சலசலப்பை உருவாக்கியது.

இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நவ நிர்மான் சேனா கட்சியினர் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மராத்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல வகைகளில் முன்னெடுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து பேசிய யோகேஷ் கதம், “மகாராஷ்டிராவில் உள்ளவர்கள் மராத்தி பேச வேண்டும். உங்களுக்கு மராத்தி தெரியாவிட்டால், என்னால் மராத்தி பேச முடியாது என்ற வகையில் உங்கள் அணுகுமுறை இருக்கக் கூடாது. மகாராஷ்டிராவில் யாராவது மராத்தியை அவமதித்தால், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யோகேஷ் கதம் கூறினார்.