காதலனை 2 மாதங்களில் 10 முறை விஷம் கொடுத்துக் கொலை செய்த கிரீஷ்மாவை போல கணவனை கொல்ல 5 முறை விஷம் கொடுத்து கொலை செய்த மனைவியின் செயல் இன்று தமிழகத்தையே உறைய வைத்துள்ளது. இன்றைய எந்திர உலகில் மனிதன் பணத்தின் பின்னால் ஓட, உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிக்க குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன.
இதற்கு காரணமாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிகிறது. நாடெங்கும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளில் பலரும் செத்து மடிகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு போட்டி போட்டு கொண்டு போட்டுத் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைக்கிறது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கணவனை உணவிலும் மாதுளை ஜூஸிலும் விஷம் வைத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறை கைது செய்துள்ள நிலையில் மனைவி கள்ளக்காதலனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே உறைய வைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரிப்பட்டியைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ரசூல். இவருக்கு அம்முபி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தனது வீட்டில் சாப்பிட்டவுடன் ரஸூலுக்கு ரத்த வாந்தி வாந்தி வந்து மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவரது உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது.

இதனால் ரசூலுகு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட தனது தம்பி மனைவி அசினாவிடம் சொல்லி அவரது செல்போனை சோதனை செய்ய சொல்லியுள்ளார். அந்த செல்போனில் இருந்த ஆடியோக்கள் அதிர வைக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரசூல் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அம்முபி மற்றும் அவரது கள்ளக்காதலனான லோகேஸ்வரனை கைது செய்துள்ளனர். அம்முபியின் வீட்டின் அருகே சலூன் கடை வைத்திருந்த லோகேஸ்வரனுக்கும், அம்முபிக்கும் பழக்கம் ஆகியுள்ளது. இருவரும் முறை தவறிய உறவில் இருந்த நிலையில் தனது நெஞ்சில் அம்முபியின் பெயரை பச்சை குத்தி லோகேஸ்வரன் இருக்கிறார்.
இந்நிலையில் சலூன் கடைக்கு ரசூல் சென்றபோது, அம்முபி லோகேஸ்வரனுக்கு வீடியோ கால் செய்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரசூல் லோகேஸ்வரனை அடித்ததோடு வீட்டுக்கு சென்று அம்முபியையும் தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அம்முபி, சாப்பாட்டில் மருந்தை ஐந்து தடவை கொடுத்து இருக்கிறார். கடைசியாக மாதுளை ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்த நிலையில் தான் ரசூல் உயிரிழந்தார். இந்நிலையில் அம்முபி, லோகேஸ்வரன் அனுப்பிய ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் பேசியுள்ள லோகேஸ்வரன்,” நான் கொடுத்த மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து விடு அதில் கொஞ்சம் கலர் மாறும், குருனை குருணையாக இருந்தால் அதனை எடுத்துப் போட்டு விடு. மருந்தை ஜூஸில் கலந்து பார்த்தபோது அது லைட்டாக கலர் மாறி இருக்கிறது.
எனவே அதனை வடிகட்டி கொடுத்துவிடு” என சொல்லி இருக்கிறார். இந்நிலையில் ரசூல் மாதுளை ஜூசை குடித்ததும் மயங்கி நிலையில் “நான் கொடுத்த ஜூசை அவர் குடித்துவிட்டார் மயங்கி விட்டார் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்துவிடும் என நினைக்கிறேன்” என ஆடியோ அனுப்பி உள்ள நிலையில், அவற்றை கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா, கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் என்பவரை 2 மாதங்களில் 10 முறை விஷம் கொடுத்துக் கொலை செய்த காதலி கிரீஷ்மாவை போல கணவனை கொல்ல 5 முறை விஷம் கொடுத்து கொலை செய்த மனைவியின் செயல் இன்று தமிழகத்தையே உறைய வைத்துள்ளது.