போயர் சமூக கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுரேஷ் குமார். போயர் சமூக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், சூலுார் அருகே பாப்பம்பட்டியில் வீராத்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ள நிலையில் இந்த நிலங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்தில் பிரச்னை ஏற்பட்டதால், இந்த கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சுரேஷ் குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிலர் கோயம்புத்தூர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது தொடர்பாக உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து பேசினர்.
அப்போது இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிவித்த நிலையில் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் சுரேஷ் குமார் அடிக்கடி உதவி ஆணையரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். அப்போது கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரூ.3 லட்சம் லஞ்சம் வேண்டும் என்று உதவி ஆணையர் இந்திரா கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குளான சுரேஷ் குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் குமார் மற்றும் இந்திரா இடையே மாட்டு சந்தையில் நடக்கும் பேரம் போல பேரம் நடத்தி ஒரு வழியாக ஒன்றரை லட்சம் ரூபாய் தந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக உதவி ஆணையர் இந்திரா தெரிவித்துள்ளார். இதற்கு சுரேஷ் குமார் சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.
ஆனால், அவருக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் கோயம்புத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் குமாரிடம் கொடுத்து இதனை உதவி ஆணையர் இந்திராவிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புதுறையின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்ற சுரேஷ் குமார் பணத்தை இந்திராவிடம் கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புதுறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.