தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 50-வது திருமண நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரை சென்று, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – துர்கா தம்பதியினர் தங்களின் 50-வது ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர்.

இதை முன்னிட்டு, நேற்றைய முன்தினம் இரவு, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மு.க. ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இரவு விருந்து வழங்கினார். தொடர்ந்து, நேற்று காலை மு.க. ஸ்டாலின் – துர்கா தம்பதியினருக்கு குடும்பத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் – துர்கா இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின், மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து இருவரும் வாழ்த்து பெற்றனர்.

அங்கிருந்து, மெரினா கடற்கரை சென்று, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மு.க. ஸ்டாலின் – துர்காவுடன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, கே.என். நேரு, தா.மோ. அன்பரசன், சிவசங்கர், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.