பாழடைந்த கீற்றுக்கொட்டகையில் காதல் ஜோடி செய்த செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. கோபமடைந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டை அடித்துச் சூறையாடி, சாலை மறியலில் குதித்துள்ளனர்.. இதனால் பெரும் பதற்றமும், பரபரப்பும் தரங்கம்பாடி அருகே ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலி மாரிமுத்து இவருடைய மகன் பார்த்திபன். இவருக்கும் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமம் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது. திவ்யதர்ஷினி +-2 முடித்துவிட்டு, கல்லூரிக்கு சேருவதற்காக காத்திருந்துள்ளார்.
இதனால் இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாளுக்கு நாள் இந்த விவகாரம் 2 குடும்பங்களுக்கும் இடையே புகைந்து கொண்டே இருந்திருக்கிறது. சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இது தொடர்பாக தகராறும் ஏற்பட்டுள்ளது. அப்போது திவ்யதர்ஷினியின் உறவினர்கள் பார்த்திபனை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன், மனசாட்சியே இல்லாமல் கொடூரமாக தாக்கியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து, பார்த்திபனின் உறவினர்கள் தரப்பில் பொறையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திடீரென, விடிகாலையில் தன்னுடைய மகள் திவ்யதர்ஷினியைக் காணவில்லை என்று அவரது அப்பா லட்சுமிகாந்தன், காவல் நிலையத்தில் ஒரு புகாரைக் கொண்டு வந்து கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினார்கள்.

சந்தேகத்தின் பேரில், பார்த்திபனின் செல்போன் சிக்னலை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அவரது சிக்னல் சாத்தங்குடி பாம்பாலம்மன் கோவில் எதிரே உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தை காட்டியது. சிக்னல் கிடைத்ததுமே, ஆய்வாளர் சந்தானமேரி தலைமையிலான காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு பாழடைந்த சின்ன கீற்றுக்கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாகத் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக 2 உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வு செய்வதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாழடைந்த கீற்றுக்கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுக்கப்பட்ட செய்தி, அதற்குள் ஊர் முழுவதும் பரவியது. ஆத்திரமடைந்த பார்த்திபனின் உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக திரண்டு வந்தனர்.. “இது தற்கொலை இல்லை, சாதி வெறியால் நடத்தப்பட்ட திட்டமிட்ட ஆணவக் கொலை” என்று குற்றம் சாட்டி, சாத்தங்குடி கிராமத்தில் உள்ள திவ்யதர்ஷினியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை அதிரடியாக அடித்து நொறுக்கிச் சூறையாடினார்கள்.
லைமை கையை மீறிப் போகவே, 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்தப் பகுதியில் அதிரடியாகக் குவிக்கப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் மற்றும் சீர்காழி உதவி ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் நேரில் வந்து பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். சாத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, முன்தினம் தாக்குதல் புகாரின் அடிப்படையில் திவ்யதர்ஷினியின் அப்பா உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காதல் ஜோடியின் மரணம் தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்பது உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அந்த கிராமங்களில் இன்னமும் பலத்த காவல்துறை பாதுகாப்பு நீடித்து வருகிறது..!!