தமிழகத்தை ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுகவுக்கும் தமிழ்நாடு அரசியலில் கொள்கை சார்ந்த விமர்சனங்களை விட தனிமனிதத் தாக்குதல்கள், மீம்ஸ், வீடியோ வார், பழைய பதிவுகளை தோண்டி எடுக்கும் டிஜிட்டல் அரசியல் என இரு தரப்பினரும் இடையேயான மோதல் சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தவெக பெண்கள் பேசிய பழைய ஆபாச வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ள திமுக ஆதரவாளர் ஜூலியின் வீடியோ இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் கலந்துகொண்டு முதல்வர் ஜோசப் விஜய் நீதியுரை வழங்கிய சில மணி நேரங்களிலேயே, அவரது அமைச்சரவையை சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத்குமார் கடந்த 2024 ஆம் ஆண்டு குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி காண சென்றுள்ளார். அப்போது கில்லி சரத் தனது மொபைல் திரையில் ஒரு வெள்ளை நிற பவுடரை ஏடிஎம் கார்டு கொண்டு நேர்த்தியாக கோடு கிழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்ற வீடியோவை, தக் லைப் என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து கில்லி சரத்குமாருக்கு கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருத்து கூறி தவெக அரசுக்கு எதிராகவும், முதல்வரின் போதை ஒழிப்பு கொள்கைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தவெக ஆட்சிக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்த விஷயத்திற்கு சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். உடல்நலம் சரியில்லாத குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி, சிரஞ்ச் மூலம் கொடுத்ததாக அவர் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதன் பின்னணியில் அமைச்சர் சரத்குமாரின் முன்னாள் நண்பரான சரண் இருப்பதாக தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் குற்றஞ்சாட்டினர். திமுக ஆதரவாளரான சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தவெக ஆதரவாளர்கள் காவல்துறையிலும் புகார் அளித்தனர். அந்தப் புகாரை அளித்த தவெக ஆதரவாளர் கிருத்திகா, செய்தியாளர்களிடம் பேசுகையில், சரண் தன்னை சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வீடியோக்கள் வெளியிட்டு வருவதாகவும், அவரது சமூக வலைதள கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கிருத்திகாவுடன் வந்திருந்த இரு பெண்கள், திமுக ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்துப் பேசியதும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக ஆதரவாளரான ஜூலி தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தற்போது தவெக ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் அந்த இரு பெண்களும் கடந்த காலங்களில் திமுக ஆதரவாளர்களை மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் விமர்சித்துப் பேசிய பல்வேறு வீடியோ கிளிப்களை ஒன்றாகத் தொகுத்து ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் கடுமையான விவாதம் வெடித்துள்ளது. “மற்றவர்களை நாகரிகம் பற்றி பேசும் இவர்கள், கடந்த காலத்தில் பேசியது என்ன?” என்ற கேள்வியை எழுப்பி திமுக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
அதேநேரம், தவெக ஆதரவாளர்கள் இந்த வீடியோ அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி எதிர்வாதம் செய்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த டிஜிட்டல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் விவாதங்கள் கொள்கைகளைத் தாண்டி தனிமனித விமர்சனங்கள், பழைய வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளை மையமாகக் கொண்டு நகர்வது தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுகிறது.