திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கடந்த சில மாதங்களாகவே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. எதிர்க்கட்சியான அதிமுகவைப் பொறுத்தவரை ஏற்கனவே பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மறுபுறம் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பிரச்சாரம் முன்னெடுத்து கடந்த 4 ஆண்டுகளில் திமுக மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் கொண்ட கொண்டு சேர்ப்பதும், திமுக உறுப்பினர் சேர்க்கையையும் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் திமுக MLA உதயசூரியன் கலந்து கொண்டார். அப்போது இளைஞரை ஒருவர் அவரிடம் மோசமான சாலைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர் திட்டி இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது உதயசூரியன் அப்பகுதியில் உள்ள மக்களிடம் திமுக சாதனைகளை விளக்கும் போஸ்டர்களை கொடுத்து இருக்கிறார். மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், “நீங்கள் சாலைகள் எதுவும் போடவில்லை. இந்த போஸ்டரை மட்டும் வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டுக் கோபமடைந்த MLA உதயசூரியன் அந்த இளைஞரைப் பார்த்து, “போடா” என்று திட்டியுள்ளார்.. அந்த நபர் தொடர்ந்து கேள்வி கேட்டபோது, “மரியாதையாகப் பேசு.. இல்லைன்னா நடக்கறதே வேற” என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த நபர், “நான் மரியாதையாகத்தான் பேசுகிறேன்” என்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காகச் சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், “சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர். வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார். உதயசூரியன் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம். திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள். ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? கடந்த நான்கு வருடங்களாகக் கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களைச் சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிகோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது!” என நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.