திருப்பூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் வள்ளியம்மாள் குடும்பத்தினர் பூரண கும்ப மரியாதை, மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்தன. திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஒரு முக்கியப் பிரச்சனைக்கு, ஒட்டுமொத்தப் பகுதி மக்களும் பாராட்டும் வண்ணம் ஒரு உன்னதத் தீர்வு கிடைத்திருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டில் வடிகால் மற்றும் கழிவுநீர் பாதைகள் அமைக்கப் போதுமான இடம் இல்லாத காரணத்தால் டீச்சர்ஸ் காலனி, மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர் மற்றும் லட்சுமி கார்டன் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் முறையான மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர்க் கால்வாய் வசதி இல்லாததால், ஒவ்வொரு மழைக் காலத்திலும் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
இந்தப் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில், திருப்பூர் 8-வது வார்டு திமுக கவுன்சிலர் வி.வி.ஜி. வேலம்மாள் காந்தி தீவிர முயற்சி மேற்கொண்டார். அவருடைய சீரிய முயற்சியின் பலனாக, அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் வள்ளியம்மாள் குடும்பத்தினர், மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடன் ஒரு நல்ல முடிவை எடுத்தனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி குடும்பத்தினர் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான, சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி அரசுக்கு தானமாக வழங்கி உள்ளார்கள். திருப்பூர் 8-வது வார்டு மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அனுபவித்த சிரமத்திற்கு, இந்தக் குடும்பத்தின் தியாக உணர்வு நிரந்தரத் தீர்வைக் கொடுத்து இருக்கிறது,
இந்த உன்னதச் செயலுக்காக, நிலம் வழங்கிய குடும்பத்தினரைப் பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டின் கவுன்சிலர் வேலம்மாள் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிலம் வழங்கிய கிருஷ்ணசாமி குடும்பத்தினர் திருப்பூர் 8-வது வார்டில் உள்ள மும்மூர்த்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பூரண கும்ப மரியாதையுடனும், மேள தாளங்கள் முழங்கவும், வான வேடிக்கைகளுடனும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டனர். மாணவர்களின் வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளும் காண்போரை நெகிழ வைத்தன.