பீகாரில் 10 -வது முறையாக JDU கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகி உள்ள நிலையில் கடந்த 20 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நிதிஷ் குமார் தன் வசம் வைத்திருந்த உள்துறை பாஜகவிற்கு சென்றுள்ளது. நடந்து முடிந்த பீகார் சட்ட சபைதேர்தலில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில் 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம்.
ஆனால் NDA கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறிய நிலையில் நிதிஷ் குமாரின் JDU கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆகமொத்தம் பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக -JDU தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் தான் பீகாரின் புதிய முதலமைச்சராக நேற்று JDU கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் 10 -வது முறையாக முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருடன் பாஜகவின் 15 பேர், JDU-வின் 8 பேர், சிராக் பஸ்வானின் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சியின் 2 பேர், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி மற்றும் ஆர்எல்எம் கட்சியின் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் பதவியேற்றனர்
இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் உள்துறை பாஜகவின் சாம்ராட் சவுத்ரிக்கு வழங்கப்பட்டது. உள்துறை என்பது தான் மாநிலத்தில் காவல்துறையினரை கட்டுக்குள் வைத்திருக்கும் இலாகாவாகும். சட்டம் – ஒழுங்கு உள்ளிட்டவற்றை நேரடியாக உள்துறை அமைச்சர் தான் கவனிப்பார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த உள்துறையை நிதிஷ் குமார் நிர்வகித்து வந்த நிலையில் இன்று முதல் முறையாக நிதிஷ் குமார் உள்துறையை பாஜகவுக்கு விட்டு கொடுத்துள்ளது.
அதேபோல் பீகார் சட்டசபை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராகவும், துணை முதல்வராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பாஜகவின் விஜய் குமார் சின்ஹாவிற்கு வருவாய் மற்றும் நில சீர்த்திருத்த துறை வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் மங்கல் பாண்டேவிற்கு சுகாதாரத்துறை வழங்கப்பட்டுள்து. அதேபோல் பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் திலிப் ஜெய்ஸ்வாலுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியமான துறைகளை பாஜக கைப்பற்றி உள்ளதால் முதலமைச்சராக நிதிஷ் குமார் இருந்தாலும் கூட ‛பவர்’ அனைத்தையும் பாஜக வசப்படுத்தி உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.