சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, இந்த எழுச்சிமிகுந்த கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தேர்தலுக்கு முன்னர், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மண்டல மாநாடுகள், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம், சமூக வலைத்தளங்களின் வழியான செயல்பாடுகள் என மகளிர் அணியைச் சேர்ந்த நீங்கள் அனைவரும் பல்வேறு பணிகளைச் செய்யும் அணியாக மிக எழுச்சியோடு செய்து முடித்தீர்கள்.
கழகம் பெற்றிருக்கும் வாக்குகளுக்கு உங்களுடைய முயற்சிகளும் முக்கிய காரணமாக அமைந்தது என்பதை, யாரும் மறுத்திட மறைத்திட முடியாது. அதற்காக முதலில் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உங்கள் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற நாம், மீண்டும் ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். அதற்கான களமாகத்தான் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. “ஆறு மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கிற மாதிரி இந்த ஆட்சி நடக்குமா?” என்று, ஏற்கனவே நான் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன். உடனே, அதை உண்மைக்கு மாறாகத் திரித்து, “ஆட்சியைக் கவிழ்க்க சதியா?” என்று கேட்டு நமது எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் ஏற்கனவே நிறைய முறை சொல்லிவிட்டேன். இன்னொரு முறையும் இந்தக் கூட்டத்தில் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.கழகம் பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்; கேள்விகளைப் கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.
ஆனால், இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று, நீங்களே சோஷியல் மீடியாவில் நிறைய வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் மூழ்கடிக்கிற மின்வெட்டு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்று நடந்த நாடகம் என்று இப்படிப் பலதரப்பட்ட மக்களும், “ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்” என்று கோபமாக, ஆவேசமாக, வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பு பற்றித்தான் தொடர்ந்து பேசினார். இன்னொன்றும் சொன்னார்; “எங்கு நல்ல விஷயம் நடந்தாலும் அது நம்ம பசங்கதான் செய்ததாக இருக்க வேண்டும்” என்று சொன்னார்.
ஆனால் இன்றைய நிலை என்ன? தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரசாரத்தில் பேசும்போது, “த.வெ.க. ஆட்சி பாதுகாப்பு கொடுக்கும்” என்று சொன்னார்கள். ஆனால், இப்போது த.வெ.க.விடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிற நிலைக்கு இன்றைக்குத் தமிழ்நாடு இருக்கிறது.
பொதுவாக எல்லோரும் ஷாப்பிங் போனால் என்ன வாங்குவார்கள்? டிரெஸ் வாங்குவார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? அதிமுக MLA-க்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார்.
நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுக MLA-க்களை தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார்.
கொஞ்சம் யோசித்துக் பாருங்கள். ஒரு கட்சியில் பல பேருக்கு இடையில் ஒருவருக்குத்தான் வேட்பாளராக வாய்ப்புக் கிடைக்கிறது. எத்தனையோ தொண்டர்கள் உழைக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளும் இவர்களது வெற்றிக்காக உழைக்கிறார்கள். இத்தனை பேரின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைத்த மை அழிவதற்குள், ரிசைன் செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.
ஜனநாயக சக்திகள் நியாயமாக இதைக் கேள்வி கேட்க வேண்டுமா, வேண்டாமா? ஒரே மாதத்தில் MLA-க்கள் ரிசைன் செய்துவிட்டு தவெகவில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் தவெகவில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிற அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
முதலமைச்சர்தான் மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள். பாலியல் வன்முறைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என்று நடப்பதையெல்லாம் பார்த்தால், யாராலாவது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு டைம் தரலாம்; ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?
“அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகப் போனார்கள்”, “பாஜக காலில் விழுந்து மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறார்கள்”, “அதனால்தான் குரூப் ஃபோட்டோ எடுக்கும்போது முன்வரிசையில் நிற்க ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார்கள்”. இதெல்லாம் யார் சொன்னது? அவர் சொன்னது. இப்போது நீங்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள், நான் கேட்கவா? இப்போது நான் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்.
Mr. Chief Minister, மாண்புமிகு முதலமைச்சர், கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பாஜகவை உறுதியாக விமர்சித்துப்பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.
நம்முடைய இயக்கம், அறிவியக்கம் என்பதைக் காட்டுங்கள். எல்லோரையும் நம்முடைய இயக்கத்தை நோக்கி அழைத்து வாருங்கள். தலைவர் கலைஞர்தான் அடிக்கடி சொல்வார்: “கட்சி என்பது தலை! ஆட்சி என்பது கிரீடம்! தலை இருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் கிரீடத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தலையைத் தேட முடியாது.” இப்போது, நாம் தலையைப் பலப்படுத்துகிற பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். நம்முடைய பலம், நம்முடைய கட்சியின் அமைப்பு முறை. அதனால்தான், “இந்தக் கருணாநிதியின் வாழ்க்கையே முடிந்தாலும் தி.மு.க.வின் வாழ்க்கை முடியாது” என்று தலைவர் கலைஞர் சொன்னார்.
தி.மு.க.வின் பயணம் தொடர உங்களுடைய உழைப்பைக் கொடுங்கள், கொடுங்கள், கொடுங்கள் என்று கூறி, நான் எப்போதும் உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, சகோதரனாக, ஒட்டுமொத்தமாக உங்களின் உடன்பிறப்பாக இருப்பேன் என்ற உறுதியைச் சொல்லி, உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி விடைபெறுகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.