கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்களே தவிர பாஜக அல்ல. நன்றி கெட்ட துரோகி எடப்பாடி நடுரோட்டில் நிற்பார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா பிறந்தாளையொட்டி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில பேர் அதிமுகவை அழிக்க நினைத்தனர் என்றும் பாஜக தான் அதிமுகவுக்கு உதவியது என்றும் பேசினார். மத்தியில் இருப்பவர்கள் நன்மை தான் செய்தார்கள் என்றும் ஒருபோதும் அச்சுறுத்தியது இல்லை
என்னை யாரும் மிரட்ட முடியாது. கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். புனிதமாக இருக்கக் கூடிய, கோவிலாக இருக்ககூடிய அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை இப்போது கட்சியில் சேர்க்க வேண்டுமா? அது தொண்டனுடைய சொத்து.. அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்களுடைய சொத்து.. நீங்க போய் அடித்து நொறுக்குவீர்கள்.. நான் உங்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்னொருவர், அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று 18 எம்.எல்.ஏக்களை கடத்திக்கொண்டு போனீங்க.. அவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டுமா? இவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டுமா? பாஜக எங்கள் ஆட்சியை காப்பற்றியது, .. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.. பல ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொல்லியிருக்கிறார். நாங்கள் அப்படி நன்றியோடு இருக்கின்றோம், என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தன்மானம்தான் முக்கியம் என கூறிவிட்டு பழனிசாமி டெல்லி சென்றது ஏன்?. பழனிசாமி படுபாதாளத்துக்கு தள்ளப்படுவார்; அதிமுக தோற்றால் நான் காரணம் அல்ல. அதிமுக கூட்டணிக்கு அமமுக உறுதியாக செல்லாது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க வாய்ப்பில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது அதிமுகவின் 122 எம்.எல்.ஏ.க்கள்தான்.

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வாக்களித்ததுதான் அவர் முதல்வராக காரணம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்களே தவிர பாஜக அல்ல, கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்வரானார். ஆனால், தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியை இப்போது போய் பார்க்கிறார். இப்போதுதான் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா கூறவில்லை. அதிமுகவில் தலைமையில் ஆட்சி என்றுதான் அமித் ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா கூறவில்லை. இதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி நம்பகத்தன்மையற்ற தலைவர். பாஜகவிற்கு அவர் நன்றியோடு இருந்தால் 2024 லோக்சபா தேர்தலில் ஏன் கூட்டணி வைக்கவில்லை.
நாங்கள் தாக்கி பேசினால் எடப்பாடி பழனிசாமியால் தாங்க முடியாது. 2026-ல் அதிமுக தோற்றால் அதற்கு எங்கள் மீது பழி போட.கூடாது அதற்கு எடப்பாடிதான் காரணம். எடப்பாடி பழனிசாமி எல்லோருக்கும் துரோகம் செய்துவிட்டார். அவர் யாருக்குத்தான் செய்துள்ளார். எடப்பாடி செயலால் அவரும் அதிமுகவும் நடுரோட்டில் நிற்க போவது உறுதி, என்று டிடிவி தினகரன் கடுமையாக பேசி உள்ளார்.