ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து, தமிழக வீரர் ஆனந்தகுமார் வேல்குமார் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார். சீனாவின் பெய்டைஹே நகரில் நடைபெற்று வரும் இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில், நேற்று இரவு நடந்த சீனியர் ஆண்களுக்கான 1,000 மீட்டர் ஸ்பிரின்ட் பந்தயத்தில், 22 வயதான ஆனந்தகுமார் 1 நிமிடம் 24.924 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
சில நாட்களுக்கு முன்புதான், இதே தொடரின் 500 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் வெண்கலம் வென்று, ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஆனந்தகுமார் வேல்குமார் படைத்திருந்த நிலையில் தற்போது, அதே தொடரில் தங்கம் வென்று அந்தச் சாதனையை மேலும் சாதனை மேல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வரும் 22 வயதான ஆனந்தகுமார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது மூத்த சகோதரி சுபி சுவேதா வேல்குமாரும் ஒரு இந்திய ஸ்கேட்டிங் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் ஆண்டு ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 15 கி.மீ எலிமினேஷன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2023 -ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3,000 மீட்டர் ரிலே பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். 2025-ஆம் உலக விளையாட்டுப் போட்டிகளில் 1,000 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் வெண்கலம் வென்று, அந்தப் போட்டிகளில் ரோலர் ஸ்போர்ட்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

தற்போது, உலக சாம்பியன் பட்டத்தையும் வென்று, இந்திய ஸ்கேட்டிங் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இப்படி ஆனந்தகுமார் வேல்குமாரின் கடின உழைப்பின் பலனாக, அவர் படிப்படியாக பல சாதனைகளைப் படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.