‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று வழங்கும் பணிகளை ஆட்சியர் பொ. இரத்தினசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாத மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரியலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.14 சஞ்சீவிராயன் கோவில் தெரு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேடுகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்குவதை ஆட்சியர் பொ.இரத்தினசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தமிழ்நாடு முதல்வர் மக்களின் குறைகளைத் தீர்க்க அவர்களின் பகுதியிலேயே நேரடியாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை வரும் ஜூலை 15 ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.
ஏழை, எளிய மக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கை மனுக்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்டம் நடக்கிறது.
இம்முகாமில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை போன்ற துறைகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு துறை சார்ந்த சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.