படிப்பறிவுடன், உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டுத் திறனையும் வளர்த்துக் கொள்வது அவசியம் என அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர்(தனியார் பள்ளிகள்) எஸ். சித்ராதேவி தெரிவித்தார். அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை 32 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை இன்று தொடக்கி வைத்தும், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சித்ராதேவி பேசுகையில், விளையாட்டில், வெற்றி தோல்விகளை எதிர்கொள்வது, விரக்திகளைக் கையாள்வது மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதன் மூலம் தன்னம்பிக்கை பெருகுகிறது.

இதுமட்டுமின்றி, கற்றுக்கொள்ளும் வேகத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், புதிய தகவல்களை எளிதில் உள்வாங்கவும் உதவுகின்றன. விளையாட்டு மூலம் கிடைக்கும் அனுபவங்கள், தனிமனிதப் பண்புகளான புத்திக்கூர்மை, விடாமுயற்சி, மற்றும் தன்னடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.

எனவே இன்றைய போட்டி நிறைந்த உலகில், படிப்பில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற பாட இணைச் செயல்பாடுகளிலும் , விளையாட்டுத் திறன்களிலும் ஈடுபடுவது மிகவும் முக்கியம். இதன் மூலம், மாணவர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும், ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் முடியும் என சித்ராதேவி தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்த விழாவுக்கு அப்பள்ளியின் முதல்வர் அந்தோணிசாமி தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று பேசினார். விழா முடிவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.