உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ட்விட்டர், நியூரோலிங் எனப் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் உலகின் மாபெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க். அமெரிக்கா அரசியலிலும் தீவிரமாக இருந்து கடந்தாண்டு நடந்த முடிந்த அதிபர் தேர்தலில் டோனால்ட் டிரம்ப்பிற்கு ஆதரவாக ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்.
அதேபோல டிரம்ப் வென்றவுடன் எலான் மஸ்கிற்கு டாஜ் எனப்படும் அரசு செலவுகளைக் குறைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், எலான் மஸ்க் டோனால்ட் டிரம்ப் இடையே சீக்கிரமே மோதல் வெடித்தது. இதையடுத்து அவர் அரசு நிர்வாகத்தில் இருந்தும், டாஜ் துறையில் இருந்தும் வெளியேறினார். இடையில் அவர் அதிபர் டோனால்ட் டிரம்ப்பை விமர்சித்தது எல்லாம் தனிக்கதை. இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் அங்குப் புதிதாகக் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகளுமே மாறி மாறி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. இரு கட்சிகள் மட்டுமே இருப்பதால் மக்களுக்கு வேறு ஆப்ஷன்கள் இருப்பதில்லை என்று குறிப்பிட்ட எலான் மஸ்க், புதிதாக அமெரிக்கா கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உங்களுடைய சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதற்காகவே அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தார். மேலும், சமீபத்திய நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 2:1 என்ற மக்கள் புதிய கட்சி தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார்.

எலான் மஸ்க் மேலும், “நமது நாட்டை வீண் மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கவே முயல்கிறார்கள். கிட்டதட்ட நாம் ஒரு கட்சி முறையில்தான் வாழ்கிறோம், அது ஜனநாயகம் அல்ல. உங்களுடைய சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதற்காகவே அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய அமெரிக்கக் கட்சி அமெரிக்காவின் உரிமைகளை மீட்டெடுக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார்.

அதேநேரம் எலான் மஸ்க்கின் இந்த புதிய கட்சி அதிபர் தேர்தலில் வென்றாலும் கூட அவரால் அதிபராக முடியாது. அமெரிக்கச் சட்டத்தின்படி ஒருவர் அதிபராக அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். எலான் மஸ்க் அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும் கூட அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.