மது போதையில் மனைவியிடம் தகராறு செய்தவரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்தவருக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகேயுள்ள கோவில் எசனை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மனோகரன் என்பவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜயகாந்த் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இது சம்பந்தமாக கிராம முக்கியஸ்தர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். மேலும், விஜயகாந்த் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னைக்கு சென்று அங்கேயே நான்கு ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்து வந்தார். சென்னையில் விஜயகாந்த் வேலை பிடிக்காத காரணத்தால் தன்னுடைய குடும்பத்துடன் மீண்டும் ஊர் திரும்பியுள்ளார் .

இத்தனை தொடர்ந்து, கடந்த 19.04.2023 அன்று இரவு விஜயகாந்த் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த கௌதமியிடம், மது போதையில் வந்த மனோகர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் காலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த விஜயகாந்திடம், நடந்த சம்பவங்கள் குறித்து கௌதமி கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அய்யனார் கோயில் அருகே பொதுமேடையில் படுத்திருந்த மனோகரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விஜயகாந்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தத நிலையில் வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர்வாலாண்டினா அவர்கள் குற்றவாளி விஜயகாந்த்துக்கு, இன்று ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜயகாந்த் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.