தமிழக முதல்வர் எல்லாரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார். SC /ST மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’ என பெயர் வைத்து இருக்கிறார். ஆனால் SC /ST மாணவர்களின் விடுதிகளின் நிலைமை என்ன என்று முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை நேரில் சென்று பார்த்து இருக்கிறாரா? என L. முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை K.K. நகரில் உள்ள ESI மருத்துவமனையில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மத்திய இணை அமைச்சர் L.முருகன் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, ESI பயனாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்களை தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவி உபகரணங்களை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு L. முருகன் பதிலளித்தார். அப்போது, தமிழக முதல்வர் மிகப்பெரிய கேலிக்கூத்தை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார். எல்லாரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார். SC /ST மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’ என பெயர் வைத்து இருக்கிறார். முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை நேரில் சென்று பார்த்து இருக்கிறாரா? நான் ST கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு விடுதியையும் நேரில் சென்று பார்த்து இருக்கிறேன்.
அங்கு விடுதியின் தரம் என்பது மிக மோசமாக இருக்கும். SC/ST விடுதியில் தங்கியிருந்து மாணவர் ஒருவர் படிக்கிறார் என்றால், அதைவிட ஒரு கொடுமையை அந்த மாணவர் அனுபவித்திருக்க முடியாது. அந்தளவு கொடுமையுள்ள விடுதிகளை, பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதாது. பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் உள்ள விடுதியில், எந்தளவு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம் என தமிழக முதல்வர் அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும்.
அதேபோல், கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள மாணவர்கள் விடுதிகள் எந்தளவு சிறப்பாக இருக்கிறது என்பதை முதல்வர் நேரில் சென்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. அந்த விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். கடந்த வாரம் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட, விடுதி வசதி சரியாக இல்லை என சாலைக்கு வந்து போராடினார்கள். மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், நிதி ஒதுக்கி விடுதிகளை மேம்படுத்த வேண்டும்.
காலணிகளை ஒழித்து இருக்கிறோம் என்கிறார்கள். பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. இதையெல்லாம் வைத்து கொண்டு சமூக நீதி பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஊட்டியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறக்க வேண்டும். சிவகாசி பட்டாசு விபத்து என்பது வாடிக்கையாக இருக்கிறது. தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்களுக்கு சரியான பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அடிப்படையில் காவல்துறைக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டி உள்ளது. காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க ஒருவர் சென்றாலும் சரி அல்லது ஒரு குற்றவாளி சென்றாலும் சரி, அவர்கள் மீதான காவல்துறையினரின் அணுகுமுறை சரியில்லை. மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் இருந்து காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என L. முருகன் தெரிவித்தார்.