ஜாதிக்கு என்று தனி ரத்தப் பிரிவு வகை இல்லை! ஜாதி அடையாளப் பெருமை பேசுகிறவர்கள், “எனக்கு என் ஜாதிக்காரனின் ரத்தம்தான் வேண்டும்”, “உடல் உறுப்பு என் ஜாதிக்திக்காரரிடமிருந்து மட்டும்தான் வேண்டும்” எனக் கோருவதில்லை! என தவெகவில் அக்கா என அழைக்கப்பட்ட இன்ஸ்டா புகழ் திமுக உறுப்பினர் வைஷ்ணவி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை உள்ள கேடிசிஆர் பகுதியில் வசித்து வரும் பட்டாலியன் காவல்துறையில் சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் – கிருஷ்ணகுமாரி தம்பதி இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகனும், சுபாஷினி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். முன்னதாக சரவணக்குமார்- கிருஷ்ணகுமாரி தம்பதி திருநெல்வேலியில் இருந்த போது, சுபாஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
அப்போதே ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் என்பவருடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். கவின் செல்வகணேஷ் சென்னையில் வேலை பார்த்து வந்தபோதிலும், விடுமுறைக்குச் செல்லும்போது சுபாஷினியை சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுபாஷினி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த கவின் செல்வகணேஷ், சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கவினை சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கவின் செல்வகணேஷின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சுர்ஜித்தின் பெற்றோரின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவினின் உறவினர்கள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முக்காணி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, மூன்று மணி நேரமாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.கவினின் உடல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் செல்வகணேஷின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பையும், சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தவெகவில் அக்கா என அழைக்கப்பட்டு வந்த இன்ஸ்டா புகழ் திமுக உறுப்பினர் வைஷ்ணவி தனது எக்ஸ் பக்கத்தில், ஜாதிக்கு என்று தனி ரத்தப் பிரிவு வகை இல்லை!” எட்டு வகை ரத்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே. மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ரத்தம் செலுத்தும் போது, அவர் எந்த ஜாதியோ, மதமோ என்பதைக் கவனிக்க மாட்டார்கள்.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளும் ஜாதி பார்க்காமல், பொருத்தம் இருந்தால் யாருக்கும் பொருத்தப்படுகின்றன. ஆனால் ஜாதி அடையாளப் பெருமை பேசுகிறவர்கள், “எனக்கு என் ஜாதிக்காரனின் ரத்தம்தான் வேண்டும்”, “உடல் உறுப்பு என் ஜாதிக்திக்காரரிடமிருந்து மட்டும்தான் வேண்டும்” எனக் கோருவதில்லை!

இந்த நவீன யுகத்திலும் மனிதநேயமற்ற ஜாதி அடிப்படையிலான ஆணவப் படுகொலைகள் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது. நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த ஆணவப் படுகொலையில் உயிரிழந்த கவின் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த கடினமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக நாம் ஒட்டுமொத்த சமுதாயமாக எதிர்க்க வேண்டும் என வைஷ்ணவி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.