திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆணவப் படுகொலையில் சுர்ஜித்தின் தந்தை சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை உள்ள கேடிசிஆர் பகுதியில் வசித்து வரும் பட்டாலியன் காவல்துறையில் சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் – கிருஷ்ணகுமாரி தம்பதி இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகனும், சுபாஷினி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். முன்னதாக சரவணக்குமார்- கிருஷ்ணகுமாரி தம்பதி திருநெல்வேலியில் இருந்த போது, சுபாஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
அப்போதே ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் என்பவருடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். கவின் செல்வகணேஷ் சென்னையில் வேலை பார்த்து வந்தபோதிலும், விடுமுறைக்குச் செல்லும்போது சுபாஷினியை சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுபாஷினி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த கவின் செல்வகணேஷ், சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கவினை சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கவின் செல்வகணேஷின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சுர்ஜித்தின் பெற்றோரின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவினின் உறவினர்கள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முக்காணி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, மூன்று மணி நேரமாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கவின் செல்வகணேஷின் உடல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் செல்வகணேஷின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பையும், சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில் கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர் இருவருமே காவல் உதவி ஆய்வாளர்களாக இருப்பதால், இந்த கொலையில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து கவின் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தம்பதி இருவருமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுர்ஜித் கொலையான நாளிலேயே காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்களின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் எனக் கவின் செல்வகணேஷின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்தச் சூழலில் தான் சுர்ஜித்தின் தந்தையான சரவணக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே இந்த சம்பவத்தில் கொலையாளி சுர்ஜித் மீது இன்று குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.