கரூர் போலவே சேலத்தில் நடந்த கூட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெயிலில் பலரும் காத்திருந்த நிலையில், விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே பட்டறைத் தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் மாநாட்டுத் திடலுக்கு அருகே ஒருவரது சடலம் கிடைத்துள்ளதால் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் மதுரை, திருவாரூர் மற்றும் திருச்சியில் பிரச்சாரம் செய்தார். ஆனால், செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், தவெக தலைவர் விஜய் பெரிய அளவில் பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை. சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டனில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்காக காலை 10 மணி முதலே நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு நாற்காலிகள் வழங்கப்படவில்லை. தண்ணீர் மற்றும் ஜூஸ் பாட்டில்கள் வழங்கப்பட்டபோதிலும், 3 மணி நேரம் வெயிலில் நின்றிருந்தனர்.

இந்நிலையில் விஜய் மதியம் 1 மணிக்கு வந்தார். விஜய்யைப் பார்த்ததும் அனைவரும் ஆரவாரம் செய்தனர். சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் இன்று விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நான் போட்ட அரசியல் குண்டு திமுக கூட்டணிக்குள் வெடித்து வருகிறது. ஆட்சியில் பங்கு கேட்டால் ஸ்டாலின் சார் பதறுகிறார். தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்கிறார். தேர்தல் வெற்றிக்காக மட்டுமே திமுக கூட்டணி வைத்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் இது தரவில்லை… அது தரவில்லை எனப்பம்ம மாட்டேன். எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன். மற்ற கட்சிகள் மாநாடு நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நான் மக்களை சந்திக்கவோ அல்லது மக்கள் என்னை சந்திக்கவோ இடம் கொடுக்க மாட்டார்கள்; கொடுக்கவும் விடமாட்டார்கள் என்று விஜய் பேசினார்.
மேலும் பேசுகையில், “நான் ஏற்கெனவே சொன்னது போல, களம் (தேர்தல் களம்) ரொம்ப சூடாக இருக்கிறது. இங்கு ரெண்டே ரெண்டு கட்சிகளுக்குத்தான் போட்டி! ஒன்று TVK, இன்னொன்று DMK! நான் சொல்றது புரியுதா?” என்று கேள்வி எழுப்பினார். விஜய் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே, அங்கிருந்த 4-5 பேர் வெயிலின் கொடுமையால் மயங்கி விழுந்தனர். அவர்களில் வடமாநில இளைஞர் சூரஜும் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சூரஜ் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் வெள்ளிப் பட்டறைத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். சேலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேலம் கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டிருந்த நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் பாஸ் இல்லாமலேயே பலர் அத்துமீறி உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது. இன்று வெயிலின் கொடுமையால் 3 மணி நேரம் ஒரே இடத்தில் நின்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிய சம்பவத்தைத் தொடர்ந்து தவெக பொதுக் கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முட்டுச் சந்து போல் இல்லாமல் பெரிய திறந்தவெளி மைதானங்களில் பெட்டிகள் அமைக்கப்பட்டு அதில் ஒரு பெட்டிக்கு இத்தனை பேரைத்தான் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சேலம் கூட்டத்திற்கு கூட கர்ப்பிணிகள், குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. தண்ணீர் உள்ளிட்டவை கொடுக்கப்பட வேண்டும். ஆம்புலன்ஸ், மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் போன்று 51 விதிகளுடன் சேலத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஒருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாநாட்டுத் திடலுக்கு அருகே ஒரு சடலம் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் மாநாட்டுக்கு வந்தவரா, யார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.