T -20 உலகக்கோப்பைய்த் தொடரில் ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2007 T -20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஜிம்பாப்வே, 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை அதே சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற குரூப் பி பிரிவு லீக் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பிரையன் பென்னட், டாடிவானாஷே மருமானி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 7.3 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்து நிலையில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பந்து வீச்சில் டாடிவானாஷே மருமானி 21 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரியான் பர்ல் மற்றும் பிரையன் பென்னட்வுடன் இணைய 15.6 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து நிலையில் கேமரன் கிரீன் பந்து வீச்சில் ரியான் பர்ல் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் பிரையன் பென்னட்வுடன் இணைய ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இறுதிக் கட்டத்தில் கேப்டன் சிக்கந்தர் ராசா, வெறும் 13 பந்துகளில், 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 25 ரன்கள் மற்றும் பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் டிராவிஸ் ஹெட்டும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சரிவிலிருந்து அணியை மீட்க மேட் ரென்ஷா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஜோடி போராடியது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 77 ரன்கள் சேர்த்தது. மேக்ஸ்வெல் 31 ரன்களில் ஆட்டமிழக்க, தனி ஆளாகப் போராடிய மேட் ரென்ஷா 44 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குரூப் பி பிரிவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசரபானி அபாரமாகப் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.