கரூர் துயர சம்பவத்திற்கு வழக்கம்போல பதவி வெறியில் ஆளுங்கட்சி தான் இதற்குக் காரணம் எனக் கூறுவது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நயவஞ்சகத்தனமே என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் TTV. தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் TTV. தினகரன் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “கரூர் கூட்ட நெரிசல் என்பது ஒரு துயரமான விபத்து. அதைக் கொண்டு அரசியல் பலன்களைப் பெற முயல்பவர்கள் மனிதநேயமற்றவர்கள். இது சதி அல்ல. தெரிந்து யாராவது மக்கள் மீது அப்படி செய்வார்கள் என்று யோசிக்க கூட முடியாது. மக்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமானது.
ஆனால் அந்த சம்பவத்துக்காக ஆளுங்கட்சியையோ, எதிர்க்கட்சியையோ குற்றம் சாட்டுவது சரியல்ல. கரூர் சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து மிகவும் மோசமானது. ஆளுங்கட்சி தான் இதற்குக் காரணம் எனக் கூறுவது அரசியல் நயவஞ்சகத்தனமே. அதேபோல் பாஜகவும் இதே பாதையில் அரசியல் செய்கிறது. பாஜக அரசியல் பலனைப் பெற முயற்சி செய்கிறது. ஆனால் இது ஒரு மனித உயிர்கள் இழந்த துயரச் சம்பவம். இதைப் பயன்படுத்தி அரசியல் செய்வது பொருந்தாது.
கரூர் சம்பவத்தில் முதலமைச்சரின் நடவடிக்கை நிதானமாக இருந்தது. அது அவரது நீண்ட அரசியல் அனுபவத்தை காட்டியது. விஜய்யை கைது செய்யக்கோரி குரல்கள் வந்தபோதும் கூட முதலமைச்சர் நிதானமாக கையாண்டார். முதலமைச்சருக்கு யாரையும் கைது செய்யும் எண்ணம் இல்லை. வருங்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது என்ற பொறுப்புணர்வுதான் முதல்வரிடம் தென்பட்டது. எந்த கட்சித் தலைவரும், சொந்த கட்சித் தொண்டர்களோ, நிர்வாகிகளோ இறப்பதை விரும்பமாட்டார்கள் என்ற முதல்வரின் கருத்து சரியே.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது ஏன் பாஜக விசாரணை குழு வரவில்லை? அப்போது ஏன் மத்திய அரசு மௌனமாக இருந்தது? ஆனால் கரூர் சம்பவத்தில் மட்டும் பாஜக உடனே விசாரணை குழுவை அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது இரட்டை நிலைப்பாடு என்பதற்கே எடுத்துக்காட்டு. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருந்தால், நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்து இருக்காது. அவர் ஒரு பெரிய தலைவராக இருப்பதால், அவரது நடவடிக்கைகள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
எனவே இந்தச் சம்பவத்தில் தவெக தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் பலனுக்காக குற்றத்தை திசை திருப்ப முயலக்கூடாது. மேலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தலைகீழாக நின்றாலும், அமமுக வீழாமல் நிற்கும். எங்கள் கட்சி எவரிடமும் விலகாது, ஒருபோதும் தளராது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சதிகள் எதுவும் வெற்றி பெறாது.
மேலும், விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்து தான் பழிவாங்க வேண்டும் என்று திமுகவுக்கு அவசியமில்லை. திமுக அரசு சட்டப்படி செயல்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மைகள் வெளிவரும்போது மக்கள் எல்லாம் புரிந்துகொள்வார்கள். கரூர் சம்பவம் ஒரு துயரம் தான், ஆனால் அதைப் பயன்படுத்தி அரசியல் செய்யாதீர்கள்.
நீதிமன்றம், அரசு, விசாரணைக் குழு என அனைத்தும் பணியில் உள்ளன. உணர்ச்சிவசப்படும் சீமான் கூட இந்த விவகாரத்தில் நிதானமாக பேசுகிறார். அதுபோல் மற்ற தலைவர்களும் உண்மையை மதித்து நடக்க வேண்டும். ஆனால் வழக்கம்போல பதவி வெறியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். வழக்கம்போல பழனிசாமியின் நடவடிக்கை அநாகரீகமாக உள்ளது. தவெகவுக்காக வக்கீல் போல் வாதாடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என TTV. தினகரன் தெரிவித்தார்.