அரை நிர்வாணத்துடன் பெண் காவலர் தூக்கில் தொங்கிய சம்பவத்தில் அவரது கணவர் கொலை செய்து விட்டதாக பெண் காவலரின் குடும்பத்தினர் பரபரப்பு புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள புளிச்சப்பள்ளத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் காவலரான சிலம்பரசனைக் காதலித்து வந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவன் – மனைவி இருவரும் எழும்பூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு புவனேஸ்வரி நடத்தையில் சிலம்பரசன் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு புவனேஸ்வரி தனக்குத் தெரிந்த ஒருவருக்கு 60,000 ரூபாய் கடன் வாங்கி கொடுத்ததாகவும் அந்த கடனை அடைப்பதற்காக அவரது சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பணம் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் இருந்தன.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிலம்பரசன், “யாரோ வாங்கிய கடனுக்கு நீ ஏன் இஎம்ஐ கட்ட வேண்டும்” என மனைவி புவனேஸ்வரியிடம் கேட்டு வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. அப்போது வாய்தகராறு முற்றியதில் புவனேஸ்வரியை சிலம்பரசன் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் மனமுடைந்த புவனேஸ்வரி கோபித்துக் கொண்டு தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம். போதையில் இருந்த சிலம்பரசன், மனைவி தாழிட்டுக் கொண்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஹாலில் படுத்து தூங்கிவிட்டாராம். இந்நிலையில் நேற்று காலை விடிந்தும் மனைவி வெளியே வராததால், கதவை தட்டியுள்ளார்.
அவர் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புவனேஸ்வரியின் தாய் அன்புக்கரசி, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “திருமணமான நாளில் இருந்தே சிலம்பரசன், எனது மகளை கொடுமைப்படுத்தி வந்தார். அவர் தினமும் குடித்துவிட்டு என் மகளை அடித்தார். என் கண் முன்பே நிறைய முறை மகளை அடித்துள்ளார்.
அது போல் வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டும் மகளை கொடுமை செய்தார். என் மகளிடம் ரூ 2 லட்சம் கேட்டு துன்புறுத்தியதாக எனக்கு போனில் தெரிவித்தார். நான் எதற்காக 2 லட்சம் என கேட்ட போது, நிலம் வாங்குவதற்காக கேட்கிறார் என என் மகள் அழுது கொண்டே சொன்னார். நானும் ஆறுதல் கூறினேன். ஆனால் என் மகள் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு காவல் நிலையத்தில் இருந்து தகவல் கிடைத்தது. அதிலும் என் மகள் உள்ளாடைகளுடன் தொங்கியதாக தெரிவித்தனர். இதனால் எனது மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது. சிலம்பரசனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அன்புக்கரசி தெரிவித்துள்ளார்.