தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் ‘பூக்கடை’ மகேந்திரன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” எனத் தனது கடைசி நிமிட வீடியோவைப் பதிவு செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த கடுமையான தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்ட நிலையில், மீண்டும் எஸ்பி வேலுமணி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, இணைந்துகொண்டார். எனினும், 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு தாவியுள்ளனர்.
சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சேரவில்லை. அவர்கள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. ஏற்கனவே, அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில் அவர்கள் தனிக் கட்சியாக செயல்படுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். பல அதிமுக முன்னாள் சீனியர்கள் தற்போது தவெகவில் இணைந்து அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் உள்ளனர்.
‘பூக்கடை’ மகேந்திரன் வெளியிட்ட வீடியோவில், அதிமுகவில் சில நாட்களாக நடக்கும் பிரச்னைகளைப் பார்க்கும்போது என்னை மாதிரியான எளிய தொண்டர்கள் மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறோம். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும். என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும்.
என்னுடன் அரசியலில் பயணித்த தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய கழக செயலாளர், திருப்பனந்தாள் பேரூர் கழக செயலாளருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கடைசி ஆசையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் நான் அதிமுக தொண்டனாக பிறக்கவே ஆசைப்படுகிறேன். விடைபெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.