பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளி தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தியபோது மரணமடைந்தது குறித்து மடப்புரத்தில் திருப்புவனம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த ஜூலை 27-ந் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தியபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரை காவல்துறை கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், ராமச்சந்திரன், சங்கரமணிகண்டன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.
மேலும், தனிப்படை காவல்துறை மடப்புரம் கோயில் பின்புறம் வைத்து அஜித்குமாரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், அந்த இடத்தை திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் இன்று விசாரணை நடத்தினர். பின்னர் காரில் புறப்பட்ட அவரிடம், அங்கிருந்த பெண்கள் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென முறையிட்டனர். அவர்களிடம் வெங்கடேஷ் பிரசாத் சம்மன் அனுப்பி முறையாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.