பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் வர்ஷா கோஹிலுக்கும், மூத்த வழக்கறிஞர் பத்ரேஷுக்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 பிள்ளைகள் பிறந்தன. அதன்பின் பல பெண்களுடன் பத்ரேஷுக்கு தொடர்பு ஏற்பட்டதால் 2002-ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வர்ஷா கோஹில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவருக்கு ரூ.3.5 கோடி ஜீவனாம்சம், ஒரு கார் வழங்கப்பட்டது. இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
ஆனால், முன்னாள் நைஜீரிய ஆளுநர் ஜேம்ஸ் இபோரியின் கூட்டாளிகளுக்குப் பத்ரேஷ் சர்வதேச அளவில் போலி ஆவணங்கள் மற்றும் சதித்திட்டம் மூலம் மில்லியன் கணக்கில் பணமோசடி செய்த குற்றத்திற்காக, லண்டன் நீதிமன்றம் பத்ரேஷிற்கு 2011-ல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பத்ரேஷ் விதித்தது. இதைத் தொடர்ந்து கூடுதல் ஜீவனாம்சம் கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் வர்ஷா கோஹில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை வர்ஷா கோஹிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து பத்ரேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம்ஸ், ‘‘வருமானத்தை மறைத்து மனைவிக்கு குறைந்த ஜீவனாம்ச தொகையை பத்ரேஷ் வழங்கியுள்ளார். எனவே, அவருக்கு ரூ.85 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதன்படி லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 61 வயது பெண் வர்ஷா கோஹில், தனது முன்னாள் கணவருக்கு எதிராக 23 ஆண்டுகளாக நடத்திய விவாகரத்து சட்டப் போராட்டத்தில் ₹85 கோடி ஜீவனாம்சம் வென்றுள்ளார்.