நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பார்வையிட்டனர். அதில், பள்ளிபாளையம் பகுதியில் நேரு நகர், அம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 11 சாயப்பட்டறைகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின்போது, சாயப்பட்டறை இயங்கிய பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பலர், அமைச்சர்களிடம் புகார் செய்தனர். இதையடுத்து பிரச்னைக்குரிய சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலனுக்கு அமைச்சர் ராஜீவ் உத்தரவிட்டார்.
கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வந்த பள்ளிபாளையம் அம்மன் கோயில் வீதியில், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் செங்கோட்டையா சாயப்பட்டறையின் கழிவுநீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கும்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இந்த ஆலையின் மின்இணைப்பை மின்வாரிய பணியாளர்கள் துண்டித்தனர். இதேபோல், நேரு நகர் பகுதியில் இயங்கி வந்த பழனிசாமி என்பவரின் சாய ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரின் சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அந்த பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.