திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ந் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மஞ்சுநாதனின் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லட்சுமணன் மனைவி லட்சுமி படுகாயமடைந்தார்.
இது குறித்து, காவலூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மஞ்சுநாதனின் காரைப் பறிமுதல் செய்து, ஆலங்காயம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை விடுவித்து தருமாறு மஞ்சுநாதன் ஆலங்காயம் காவல் நிலையத்தை அணுகினார்.
அப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் என்பவர், காரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மஞ்சுநாதன், ஆலங்காயம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணனுக்கு பாடம் புகட்ட நினைத்து திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை மஞ்சுநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் ஆலங்காயம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். இதையடுத்து, ஆலங்காயம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் துறைரீதீயான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், ஆலங்காயம் காவல் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.