சென்னை எழும்பூர் தமிழ்ச்சாலை பகுதியிலுள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கும் நபர்கள், லாட்ஜில் அளிக்கும் செல்போன் நம்பரை வைத்து, அந்த நபர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்கள் புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொழில் செய்து வருவதாக விபசார தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ராஜலட்சுமிக்கு புகார் வந்தது.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்த விபசார தடுப்பு பிரிவு-1 ஆய்வாளர் சிவகுமாருக்கு உதவி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் குழுவினர் சம்பந்தப்பட்ட லாட்ஜில் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாட்ஜின் முதல் மாடியில் அறையில் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த பாலியல் புரோக்கர் டேவிட் ஜெயகுமார் என்பவர் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து டேவிட் ஜெயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட புரோக்கரை, காவல்துறையினர் சைதாப்பேட்டை 23-வது எம்எம் நீதிமன்ற நீதிபதி பத்மகுமாரி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 2 பெண்களை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.