முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திமுகவுக்கு பவளவிழா எடுக்கிறார். கூவத்தூர் குத்தகைக்காரரோ அதிமுகவுக்கு பிளவுவிழா நடத்துகிறார் என மருது அழகுராஜ் தெரிவித்தார். அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகிய இருவரும் சில வாரங்களுக்கு முன்பாக திமுகவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த நிலையில் OPS ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர், நமது அம்மா ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தவர். அதிமுகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வந்த அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுகவுக்காக போட்டியிட்டவர். OPS மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையில் மோதல் ஏற்பட்ட போது, OPS அணியுடன் இணைந்து பணியாற்றினார். சிவகங்கையில் மருது அழகுராஜ்க்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வந்த நிலையில், OPS-க்கு சாதகமாக அமைந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக OPS மீது அதிருப்தியில் இருந்து வந்த மருது அழகுராஜ், திடீரென விஜய்க்கு அதிக பாராட்டுக்களை தெரிவித்து வந்தார். இதனால் விரைவில் தவெகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே முக்குலத்தோர் சமூக வாக்குகளை பெறுவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப OPS அணியில் இருந்த முக்கிய நிர்வாகியான மருது அழகுராஜ் திமுக பக்கம் சென்றிருப்பது கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுகவில் இணைந்தது தொடர்பாக மருது அழகுராஜ் பேசுகையில், ஜனநாயகத்திற்கு புறம்பாக அதிமுகவை அபகரித்திருக்கும் எடப்பாடியால் வஞ்சிக்கப்படுவோருக்கு அறிவாலயம் தான் அன்புச் சரணாலயம். முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திமுகவுக்கு பவளவிழா எடுக்கிறார். கூவத்தூர் குத்தகைக்காரரோ அதிமுகவுக்கு பிளவுவிழா நடத்துகிறார்.
எப்படியோ, சேயை தாயோடு இணைக்கும் சரித்திர சந்தர்ப்பத்தை எடப்பாடி பேய் ஏற்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. ஆட்சியையும் சிறப்பாக நடத்திக் கொண்டு, கட்சியையும் ஒற்றுமையாக வைத்துக் கொண்டு, கூட்டணியையும் எவ்வித பிளவும் இல்லாமல் ஸ்டாலின் முன்னெடுக்கக் கூடிய இந்த அரவணைப்பு அரசியல் மீது எனக்கு மரியாதை உண்டு. அதனால் திமுக பிடித்த இயக்கமாக மாறிவிட்டது என மருது அழகுராஜ் தெரிவித்தார்.