கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து, சடலங்களை மூட்டையில் கட்டி பைக்கில் எடுத்துச் சென்று டீசல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராணுவ வீரரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் ஆலப்பட்டி ஊராட்சி வெப்பாலம்பட்டி சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் கொடுகூர் என்னுமிடத்தில் அதே பாணியில் சாலையோரம் மற்றொரு சடலம் தீ வைத்து எரிக்கப்பட்டு கிடந்தது. பெட்ஷீட்டால் சுற்றி, தென்னை ஓலைகளை மேலே போட்டு தீ வைத்திருப்பது தெரியவந்தது. அந்த உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
கொலையான இருவரும் யார் என்று தெரியாமல் காவல்துறையினர் திணறி வந்த நேரத்தில், அங்குள்ள ‘மொபைல் டவர்’ விவரங்களை சேகரித்து விசாரணை கோணத்தை மாற்றினர். இதில், கொலையானவர்கள் கிருஷ்ணகிரி டவுன் அடுத்த பாலக்குறி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஸ்குமார் மற்றும் அவரது தந்தையான முன்னாள் ராணுவ வீரர் செல்லப்பன் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக மகேஸ்குமாரின் மனைவி பானுப்பிரியா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலன் பூவரசன் என்பவருடன் சேர்ந்து கணவன், மாமனாரை கொலை செய்தது தெரிய வந்தது. விசாரணையில், மகேஸ்குமார், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். அவரது தந்தை செல்லப்பனும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். பானுப்பிரியாவுக்கும், மேல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கோழி வாகனம் ஓட்டும் டிரைவர் தளபதி(எ) பூவரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில், கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதுகுறித்து மகேஸ்குமாருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே, விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் கள்ளக்காதல் விவகாரம் குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் மறுத்தார். நிலையில், பானுப்பிரியா இல்லாத நேரத்தில் அவரது செல்போனை எடுத்து பார்த்ததில், பூவரசனிடம் பலமுறை தொடர்பு கொண்டு பேசியதும், குறுஞ்செய்தி அனுப்பியதும் தெரியவந்தது. இந்நிலையில், பனுப்பிரியா அனுப்புவதை போல காதல் ரசம் சொட்டும் மெசேஜ்களை பூவரசனுக்கு மகேஸ்குமார் அனுப்பியுள்ளார். அதற்கு பூவரசனும் திருப்பி ‘ரிப்ளை’ செய்தைக்கண்டு ஆத்திரமடைந்த மகேஸ்குமார் கடந்த 11-ந் தேதி இரவு பானுப்பிரியாவிடம் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது கள்ளக்காதலன் பூவரசனுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது எலக்ட்ரிக் பைக்கில் அங்கு வந்த பூவரசன், மகேஸ்குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, பானுப்பிரியா கணவனை பிடித்துக் கொள்ள பூவரசன் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மகேஸ்குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது தந்தை செல்லப்பன் அங்கு வந்துள்ளார்.
அவரையும் பானுப்பிரியா பிடித்துக் கொள்ள பூவரசன் கத்தியால் குத்தியுள்ளார். நிலைகுலைந்து கீழே சரிந்த அவரும் உயிரிழந்தார். பின்னர் இருவரின் சடலங்களையும் பெட்சீட்டால் சுற்றி சாக்கு மூட்டையில் தனித்தனியாக கட்டி, பைக் மூலமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் எடுத்துச் சென்று அடுத்தடுத்து போட்டுள்ளனர். பிறகு, பூவரசனும் பானுப்பிரியாவும் டீசல் வாங்கி வந்துள்ளனர். அங்கிருந்த தென்னை மட்டை உள்ளிட்டவற்றை சடலங்களின் மீது போட்டு எரித்துவிட்டு ஒன்றும் தெரியாததை போல சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.