போலி சாமியார் ஒருவர் விவசாயி ஒருவருக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக கூறி மதுபோதையில் பரிகார பூஜை நடத்தி செய்த பைத்தியக்காரத்தனமான செயலால் நீலகிரியே ஆட்டம் கண்டுள்ளது.
நாடெங்கும் மூடநம்பிக்கைகள் ஆங்காங்கே பரப்பி கிடக்கின்றது. சிலர் தான் ஒரு சாமியார் என்று சொல்லிக் கொண்டு குறி சொல்கின்றேன் என்று வாயில் வந்ததை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களிடம் குறி கேட்க வேண்டும் என்றால் போகும் போதே குவாட்டர் பாட்டிலை வாங்கி கொண்டு போக வேண்டும். குறி கேட்க செல்பவர்கள் குவாட்டர் பாட்ல் வாங்கி கொண்டு போக அந்த சாமியார் குவாட்டர் பாட்டிலை அப்படியே ராவாக அடித்துவிட்டு, திடீரென சாமியார் அவதாரம் எடுக்கின்றார்கள்.
அவர்கள் மனதில் தோன்றும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர். பின்னர் காணிக்கை என்ற பெயரில் பணத்தையும் வசூலிக்கின்றனர். இப்படி சாமியின் பெயரை சொல்லி சரக்கும், பணமும் வாங்கி கொண்டு, குறி கேட்க செல்பவர்கள் இறுதியாக கொஞ்சம் விபூதியுடன் ஒரு எழுமிச்சை பழத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறி சொல்லும் போலி சாமியாராக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் தனக்கு மதுபானம் வாங்கி வருமாறு அதே பகுதியை சேர்ந்த நாகராஜிடம் பணம் கொடுத்து இருக்கிறார். நாகராஜிம் மது வாங்கி கொடுத்துள்ளார். போலி சாமியார் சிவக்குமார் அந்த மதுபானத்தை குடித்தார்.
பின்னர் நாகராஜுக்கு மனநிலை சரியில்லை என அக்கம் பக்கத்தில் பேசுவதாக கூறி, அதற்கு பரிகார பூஜை செய்கிறேன் என சிவக்குமார் கூறி இருக்கிறார். பின்னர் அவரை வீட்டில் அமர வைத்து சிவக்குமார் குடிபோதையில் பூஜை செய்து உள்ளார். அவர் மீது திருநீர், குங்குமத்தை வீசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து நாகராஜின் தலை, நெற்றியில் என சரமாரியாக குத்தி இருக்கிறார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விவசாயி நாகராஜை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த கொலக்கம்பை காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து வருகிறார்கள்.
போலி சாமியார் சிவக்குமார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறி சொல்லி வருவதும், பெரும்பாலான நேரங்களில் மதுபோதையில் இருப்பாராம். சிவராத்திரி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை என்ற பெயரில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அவரது வீட்டிற்கு வந்து வழிபாடு செய்வார்களாம். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனர்.