ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்று அந்த காலத்தில் சொல்வார்கள். ஆனால் ஒரே ஒரு பொய் சொல்லி திருமணம் செய்த பெண் இன்று கம்பி எண்ணுகிறார். நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியை சேர்ந்த நவீன்குமார் என்பவர் கோயம்புத்தூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்த்தினியுடன் திருமணம் நடந்துள்ளது.
நவீன்குமாரின் பெற்றோர் திருமணத்திற்கு பெண் பார்த்தபோது கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வருவதாக தன்வர்த்தினி கூற தோற்றம் மற்றும் செயல்பாடுகள் மற்றும் நுனி நாக்கில் பேசிய ஆங்கிலம் என எந்த விசாரணையும் செய்யாமல் உண்மை என்று நம்பியது. திருமணத்திற்குப் பின் தன்வர்த்தினியின் நடவடிக்கையில் நவீனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நவீன்குமார் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறை விசாரணை நடத்தியதில் வருவாய் கோட்டாட்சியர் என கூறி நாடகமாகடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்வர்த்தினி மற்றும் அவரது தந்தை ரவீந்திரன், தாயார் கல்பனா ஆகிய மூவர் மீதும் குற்றப்பிரிவு போலீஸார் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தன்வர்த்தினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்று அந்த காலத்தில் சொல்வார்கள். ஆனால் வருவாய் கோட்டாட்சியர் பணியில் இருப்பதாகக் கூறி ஒரே ஒரு பொய் சொல்லி திருமணம் செய்த பெண் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.