தவெக வல்கர் வாரியர்களின் முகம் கூடவா வித்தியாசம் தெரியாமல் இருக்கும்?. இதே போன்று தேர்தல் நேரத்தில் வேறு எதிலும் ஊதிவிடப் போகிறீர்கள். சரியாக மடக்கு ஊதியில் ஊதிட்டு வாங்க. அப்புறம் உங்கள் தலைவருக்கு டெபாசிட் கிடைக்காமல் போய்விடப் போகிறது என ஜல்லிக்கட்டு ஜூலி விமர்சித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் 2017-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, போராட்டக் களத்தில் தொடர்ந்து முன்னின்று முழக்கமிட்டதன் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஜூலி. சமூக வலைத்தளங்களில் தன் கருத்துகளை தைரியமாக சொல்லும் நபராக மாறிய ஜூலி, மீண்டும் ஒரு வீடியோவால் பேசுபொருளாகி இருக்கிறார்.

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. இதில், விஜய் பங்கேற்று பேசிய போது, “ஒரு பெரிய ஊரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நான்கு சாலை சந்திக்கும், நடுபகுதியில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை, தன் காலில் மண்ணை வீசி தள்ளி, சீறிக்கொண்டு நிற்கிறது. அதன் அருகே யாராலும் செல்ல முடியவில்லை. அந்தக் காளையை அடக்கி அமைதிபடுத்தினால்தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
அந்த ஊரில் இருக்கும் சிலருக்கு மட்டும்தான் அந்த காளை அடங்கும். ஆனால் அவர்கள் யாரும் அங்கு இல்லை. ஆனால், அந்தக் காளையை அடக்கியவர்களுடன் இருந்த சிலர் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள், நாங்கள் பார்க்காத காளையா என எண்ணி அதனை அடக்க முயன்றனர். ஆனால், ஒருவராலும் அந்தக் காளையை அடக்கமுடியாமல் போனது.

அப்போது ஒரு சின்ன பையன், அந்தக் கூட்டத்தை விளக்கிவிட்டு நுழைகிறான். அப்போது அடிவாங்கியவர்கள், அனுபவம் நிறைந்த எங்களாலேயே முடியவில்லை என ஏளனம் செய்கிறார்கள். மறுபக்கம் சின்ன பையனை பார்த்து பரிதாபம் படும் கும்பல். அந்த பையன் தைரியமாக உள்ளே செல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்கிறான். சீறி முட்டவந்த காளை அருகே வந்ததும், தன் பாக்கெட்டில் இருந்த இரண்டு புல்லுக்கட்டை நீட்டுகிறான். அதனை பார்த்ததும், காளை அடங்கி அதனை சாப்பிட தொடங்கி அவனுடன் குழந்தைபோல் வந்துவிடுகிறது
வாய் இருக்கு என நசநசவென பேசியவர்கள் எல்லாம் தலைகுனிந்து நின்றார்கள். அங்குவந்த பெரியவர், அந்த சிறுவனிடம் கேட்டபோது, காளை பசியோடு இருப்பதை பார்த்தேன். அதனால், அதனைக் கொடுத்து அதனை அடக்கினேன் என்றான். இதை கேட்டு பெரியவர் சொன்னார், அனுபவம், பெரியவர், சிறியவர் என்பதெல்லாம் இல்லை. பிரச்சனை என்ன என்பதை அறிந்து அதனை சரிசெய்பவனே முக்கியம் என சொல்லி அந்தப் பெரியவர் சென்றுவிட்டார். ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாடு அரசியல் களம். பெரியவர் தான் நம் மக்கள், பாக்கெட்டுக்குள் கைவைத்துக்கொண்டுவந்த சிறுவன் விஜய் இல்லை. நாம் அனைவரும் சேர்ந்த தவெக” என பேசி இருந்தார்.

அந்த பேச்சை குறித்து ஜல்லிக்கட்டு ஜூலி வெளியிட்ட வீடியோவில், “”நான் ஜூலி. இப்போதுதான் உங்கள் வேலூர் பிரசாரத்தை பார்த்தேன். வழக்கம்போல அதில் ஒன்றும் இல்லை. கூட்டத்தில் ஒரு குட்டிக் கதை கூறியிருந்தீர்கள். அதைக் கேட்டு என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. நீங்கள் போகிற போக்கில் ஜல்லிக்கட்டு காளை நின்றது. அதற்கு புல்லுக்கட்டு காட்டியதும், ஓரம் சென்று நின்றது எனக் கூறிவிட்டுச் சென்றுவிடுவீர்கள். உங்கள் கட்சியில் இருக்கும் பாதி பேர் மைனர். அவர்கள் ஜல்லிக்கட்டு காளையிடம் சென்று புல்லுக்கட்டி காட்டும்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆவது. 50 என்பது 50 ஆகவே இருக்கட்டும். 500 ஆக்கிவிடாதீர்கள்.
எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு அனுமதி வாங்கி வைத்திருக்கிறோம். உங்கள் ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளையிடம் சென்று புல்லுக்கட்டு காட்டும்போது ஏதாவது ஆகிவிட்டால், திரும்பவும் போராட யாருக்கும் திராணியில்லை” எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ வைரலானதும், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜூலியை கடுமையாக விமர்சித்தனர். சிலர் திட்டியும், சிலர் மிரட்டலும் விடுத்ததாக ஜல்லிக்கட்டு ஜூலி கூறினார்.

இதற்குப் பிறகு ஜல்லிக்கட்டு ஜூலி வெளியிட்ட இன்னொரு வீடியோவில், “என்னை பழிவாங்கணும்னா நான் வீட்ல இருப்பேன், இல்லனா என் ஆபீஸ்ல இருப்பேன். நீங்க தான் பனையூரை விட்டு வர மாட்டீங்களே விஜய்ணா, நான் வேண்டுமானால் வர்றேன்” என ஜல்லிக்கட்டு ஜூலி சவால் விட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில் தவெக தொண்டர்கள் பலர் ஜூலியை விமர்சித்து வருகின்றனர். இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு பதிலாக சில ரசிகர்கள், “மூன்று கல்யாணம் செய்த ஜூலி எங்கள் அண்ணனை பற்றி பேச கூடாது” என்று விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலாக, ஜல்லிக்கட்டு ஜூலி தற்போது இன்னொரு வீடியோவில், சமையல் செய்து கொண்டிருந்த தனது காதல் கணவர் முகம்மது இக்ரீமை காட்டி, ஹாய் ஹலோ வணக்கம், வெர்ச்சுவல் சாரி வல்கர் வாரியர்ஸ். இவர் தான் என் மூன்றாவது கணவர். ஆனால் எங்களுக்கு இப்பொழுது தான் முதல் முறை திருமணம் நடந்திருக்கிறது.

இதற்கு முன்பு தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் எனக்கு திருமணம் நடந்தது. அதற்கும் முன்பு அம்மன் தாயி படத்தில் திருமணம் நடைபெற்றது. தவெக வல்கர் வாரியர்களின் ரெக்கார்டின்படி இது மூன்றாவது திருமணம். முகம் கூடவா வித்தியாசம் தெரியாமல் இருக்கும்?. இதே போன்று தேர்தல் நேரத்தில் வேறு எதிலும் ஊதிவிடப் போகிறீர்கள். சரியாக மடக்கு ஊதியில் ஊதிட்டு வாங்க. அப்புறம் உங்கள் தலைவருக்கு டெபாசிட் கிடைக்காமல் போய்விடப் போகிறது என்று அரசியல் ரீதியாகவும் கிண்டல் செய்தார்.
ஜூலியின் இந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட்ஸ் வெடித்து சிதறி வருகின்றன. விஜய் ரசிகர்கள் பலர், “எங்கள் தலைவரை பற்றி பேசாதீங்க” என்று கடுமையாக எழுதுகிறார்கள். மற்றொரு பக்கம், “தவெகவுக்கு போட்டி ஜூலிதான்” என்று சிலர் கிண்டலாக கமெண்ட் செய்கிறார்கள். இன்னும் சிலர், “எதையும் நேராகச் சொல்லும் தைரியம் ஜூலிக்கே இருக்கிறது” என்றும் ஆதரிக்கிறார்கள்.