தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள மயில்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தர்மராஜா. இவரது மனைவி பி.ஏ பட்டதாரியான அட்சயா இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். அட்சயா திருச்சி, கோயம்புத்தூரில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார். தவெக தலைவர் விஜயின் தீவிர ரசிகை. சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்
இந்நிலையில் திருச்சியில் பணி புரிந்த போது அட்சயாவுக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் அடிக்கடி மயில்பாளையம் வந்து அட்சயாவை சந்திப்பார். இது தெரிந்ததால், ராஜா மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3-ந் தேதி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி அட்சயா தனியாக இருக்கும் போது அவரது கணவர் கையும் களவுமாக பிடித்து மனைவியை தட்டி கேட்கிறார்.
மேலும் வீட்டில் உள்ள அவனை வெளியே வரச்சொல்லுமாறு கூறினார். அந்த நபர் வெளியே வந்ததும் அவரை தாக்கினார். பின் அந்த நபர், வீட்டை விட்டு ஓடுகிறார். இப்படி அந்த வீடியோ முடிகிறது. இதனிடையே தர்மராஜா அழுது கொண்டே பேசும் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில், ‘‘தமிழக காவல்துறைக்கு வணக்கம். இன்று என் குடும்பமே அழிந்து போய் விட்டது. என் குழந்தையும் என்னுடன் சேர்ந்து சாகப்போகிறான். என் மனைவியை கத்தியால் கிழித்து போட்டு விட்டு வந்து விட்டேன். இது எல்லாத்துக்கும் காரணம் திருச்சியை சேர்ந்த ஜோஸ் என்பவர் தான். அவனால் எல்லாமே போய் விட்டது என்று வீடியோவில் பேசியுள்ளார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மயில்பாளையத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் தர்மராஜா-அட்சயா தம்பதியிடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்ட தர்மராஜா கத்தியால் அட்சயாவின் வாய், கன்னம், உதட்டில் சரமாரியாக குத்தினார்.
பின்னர் அட்சயாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு மகனை தூக்கி கொண்டு தப்பியது தெரியவந்தது. படுகாயமடைந்த அட்சயா, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல்துறையினர், கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் வல்லத்தில் மகனுடன் தர்மராஜா இருப்பது தெரியவந்தது. அதன்படி தனிப்படை காவல்துறையினர் நேற்று வல்லத்துக்கு சென்று அங்கு மகனுடன் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து பட்டுக்கோட்டை காவல்துறையில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அட்சயா நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், தற்போது சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ எதுவுமே இப்போ எடுத்தது கிடையாது. 2025 ஏப்ரல் மாதம் எடுத்த வீடியோ. இதை தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட கூடாது என காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இது பேக் வீடியோ. எனது கணவர் கஞ்சா போதையில், நான் தங்கி இருந்த விடுதியில் வந்து என்னிடம் தகராறு செய்தார். அதில் நிறைய பேர் தங்கி இருக்கிறோம்.
நான் தங்கி இருக்கும் பக்கத்து அறையில் வேறு பெண்களெல்லாம் தங்கி இருந்தார்கள். அவர்களை எல்லாம் அவர் கவர் பண்ணி வீடியோ எடுக்கவில்லை. என்னை மட்டும் கார்னர் பண்ணி வீடியோ எடுத்தார். நான் வேலைக்கு போகக்கூடாது என்பதற்காக பலமுறை டார்ச்சர் செய்து எனக்கு மொட்டை அடித்துவிட்டார். நான் ஸ்லீவ்லெஸ் டிரஸ் போட்டிருந்தேன் தான்.
ஹாஸ்டலில் இரவு நேரங்களில் நாங்கள் ஸ்லீவ்லஸ் டிரஸ் தான் போட்டு இருப்போம். கஞ்சா அடித்துக்கொண்டு என்னை தாக்குவார். அதனால்தான் நான் ஒரு வருஷமாக அவரை பிரிந்து இருக்கிறேன். அவர் சிகரட்டில் எல்லாம் சூடு வைத்திருக்கிறார். இப்ப கூட நான் வாழ வருகிறேன் என சொல்லிக் கொண்டுதான் வந்தார். என் பிள்ளையையும் போட்டு டார்ச்சர் செய்வார் என அட்சயா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.